மக்கள் நல கூட்டணி போட்டியிடுவது பற்றி ஓரிரு நாளில் முடிவு இரா.முத்தரசன் பேட்டி


மக்கள் நல கூட்டணி போட்டியிடுவது பற்றி ஓரிரு நாளில் முடிவு இரா.முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 16 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடுவது பற்றி ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என இரா.முத்தரசன் கூறினார்.

திருச்சி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்தது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என கோரி திருச்சி உறையூர் குறத்தெருவில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில குழு உறுப்பினர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முத்தரசன் பேட்டி

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. தற்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் மர்மம் இருப்பதால் தான் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோருகிறோம்.

தமிழக அரசு முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி இருப்பது போதாது. கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் மாணவர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இடைத்தேர்தலில் போட்டியா?

நதி நீர் ஆணையம் அமைப்பதை போன்று காவிரி மேலாண்மை வாரியத்தையும் அமைக்கவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு இதுவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நல கூட்டணி போட்டியிடுமா? என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story