முதல்–அமைச்சர் வருகை குறித்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
எடப்பாடி
முதல்–அமைச்சர் பங்கேற்கும் விழாஎடப்பாடி நகராட்சியில் பொன் விழா நினைவு தூண் திறப்பு விழா, முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடியில் அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி முதல்–அமைச்சர் பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமையில் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், திட்ட அலுவலர் கவிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, எடப்பாடி நகராட்சி முன்னாள் நகரசபை தலைவர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து விழா நடைபெற உள்ள இடங்களையும், பொன் விழா நினைவு தூண் அமைந்துள்ள இடத்தையும் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்..