தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக காட்டெருமைகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி கடக்கோடு கிராமத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் கட்டபெட்டு வனச்சரகர் சிவா தலைமையில் வனவர் சிவக்குமார் மற்றும் வனக்காப்பாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்நடை டாக்டர் ராஜன் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்தது 10 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலியாகும். இயற்கையாக அது இறந்து உள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே உண்மையாக காரணம் தெரியவரும் என்றனர். இதையடுத்து, அந்த சிறுத்தைப்புலியின் உடலை வனத்துறையினர் அங்கேயே தீவைத்து எரித்தனர்.