நெல்லை மாவட்டத்தில் ரூ.6.14 கோடியில் 101 குளங்களில் குடிமராமத்து பணி; கலெக்டர் ஆய்வு


நெல்லை மாவட்டத்தில் ரூ.6.14 கோடியில் 101 குளங்களில் குடிமராமத்து பணி; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 19 March 2017 1:30 AM IST (Updated: 19 March 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 101 குளங்களில் குடிமராமத்து பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் கருணாகரன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 101 குளங்களில் குடிமராமத்து பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை கலெக்டர் கருணாகரன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தமிழகத்தில் குளங்களில் குடிமராமத்து பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து, திட்ட பணியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த பணிகள் நெல்லை மாவட்டத்தில் 101 குளங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் நேற்று சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கோட்டை அருகில் உள்ள பரமனேரி குளத்தில் சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுதல், மடை பழுதுபார்த்தல், கரையை பலப்படுத்துதல், கால்வாய் தூர்வாருதல், வெள்ள தடுப்புச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.6.50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பண்பொழி பெரியகுளத்தில் ரூ.5 லட்சம் செலவிலும், கீழப்பூலியூர் குளம் ரூ.5 லட்சத்திலும், ஆலங்குளம் அருகே மாறாந்தை பெரிய குளத்தில் ரூ.5 லட்சத்திலும், வாகைகுளத்தில் ரூ.5 லட்சம் செலவிலும் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக கலெக்டர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

101 குளங்கள்

தமிழகம் முழுவதும் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் நீர்வள ஆதார அமைப்பு மூலம் குடிமராமத்து பணிகள் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற கார்பருவ சாகுபடிக்கு தயாராகும் வகையில் இந்த பணிகள் நெல்லை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தென்காசி, சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில் 85 குளங்களில் குடிமராமத்து பணிகள் ரூ.5 கோடி செலவிலும், நெல்லை தாமிரபரணி வடிநில கோட்ட பகுதியில் 16 குளங்களில் குடிமராமத்து பணிகள் ரூ.1.14 கோடி செலவிலும், மொத்தம் 101 குடிமராமத்துப் பணிகள் ரூ.6 கோடியே 14 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

இதில், குளக்கரைகளை பலப்படுத்துதல், சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், மடை பழுதுபார்த்தல், வரத்து கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பு சுவர் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விவசாயிகளின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. குளங்களில் உள்ள அமலைச் செடிகளும் அகற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் குளங்களில் தண்ணீர் கூடுதலாக தேக்கிவைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும் 48 குளங்கள்

இதுதவிர ஊரக வளர்ச்சி முகமை, தாய் திட்டத்தின் மூலம் 48 குளங்களை தூர்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

ஆய்வின்போது, தென்காசி உதவி கலெக்டர் வெங்கடேஷ், பொதுப்பணி துறை சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் காளிராஜ், சிற்றாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் மதனசுதாகரன், மாரியப்பன், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணி, சுப்பிரமணிய பாண்டியன், சண்முகவேல், சகாயஇளங்கோ, தென்காசி தாசில்தார் அனிதா மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story