ஊத்துக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நாடகம் நடத்தி கட்டிய பள்ளி கட்டிடம் இடிப்பு பழைய மாணவர்கள் கண்ணீர்

ஊத்துக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நாடகம் நடத்தி கட்டிய பள்ளி கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதை பார்த்து பழைய மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1954–ம் வருடம் தொடங்கிய போது போதிய வகுப்பறைகள் கிடையாது.
இதனால் ஊர் பொதுமக்கள், அப்போது நாடகம் மற்றும் சினிமாத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சென்னையில் சந்தித்து, பள்ளி கட்டிடம் கட்ட நன்கொடை கேட்டனர்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் ஊத்துக்கோட்டைக்கு வந்து நாடகம் நடத்தி தருகிறேன். அதன் மூலம் வரும் தொகையை கொண்டு கூடுதல் பள்ளி வகுப்பறைகள் கட்டிக்கொள்ளுங்கள்’’ என்று கூறினார்.
கூடுதல் பள்ளி கட்டிடம்சொன்னது போலவே எம்.ஜி.ஆர். 1955–ல் ஊத்துக்கோட்டைக்கு வந்து ‘சுமை தாங்கி’, ‘இன்ப கனவுகள்’ என்ற நாடகங்களை நடத்தினார். அதன் மூலம் வசூலான தொகையை பள்ளி வகுப்பறைகள் கட்ட அன்பளிப்பாக வழங்கினார்.
அதன்பேரில் 1956–ல் அரசு ஆண்கள் பள்ளிக்கு கூடுதலாக 6 அறைகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நாடகம் நடத்தி கட்டியதால் அந்த கட்டிடத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரே சூட்டப்பட்டது.
இடித்து தரை மட்டம்இந்தநிலையில் அந்த கட்டிடம் கட்டி 61 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த கட்டிட சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. மேற்கூரையும் சிதிலமடைந்து விட்டதால் மழை பெய்தால் ஒழுக ஆரம்பித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக அந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டனர்.
பழுதடைந்த அந்த பள்ளி கட்டிடத்தை இடித்து தள்ளிவிட வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம், எம்.ஜி.ஆர். பெயருடன் கம்பீரமாக காட்சி அளித்த அந்த கட்டிடத்தை நேற்று இடித்து தரைமாட்டமாக்கியது.
மாணவர்கள் கண்ணீர்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட போது அந்த அறைகளில் படித்த பழைய மாணவர்கள், தங்களின் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
எம்.ஜி.ஆர். நாடகம் நடத்தி கட்டிய அந்த பள்ளி கட்டிடத்தில் தற்போது வகுப்புகள் நடைபெறாவிட்டாலும், எம்.ஜி.ஆரின் நினைவுச் சின்னமாக அந்த பள்ளி கட்டிடத்தை அப்படியே விட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.