ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்


ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2017 3:37 AM IST (Updated: 21 March 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

பெங்களூரு

ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

பட்ஜெட் மீது விவாதம்

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கலந்து கொண்டு பேசியதாவது:–

கர்நாடக பட்ஜெட்டை சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். அதில், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அரசு இந்த வி‌ஷயத்தை பட்ஜெட்டில் கூறியுள்ளது. ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வரவேற்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் இதை எதிர்த்து போராட்டம் நடத்தியது.

பா.ஜனதா கட்சி வெற்றி

இந்த நிலையில் உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ரூபாய் நோட்டு ரத்து குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொண்டது. ஆனால் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. ரூபாய் நோட்டு ரத்து முடிவுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர். இதில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டு ரத்து முடிவு காங்கிரசுக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகவில்லை. இந்த காங்கிரஸ் அரசு பட்ஜெட்டில் ரூபாய் நோட்டு குறித்து குறிப்பிட்டு தவறு செய்துவிட்டது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.

லேசான வாக்குவாதம்

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சிவமூர்த்தி பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அங்கு பா.ஜனதா வெற்றி பெறவில்லை. தவறான வழியில் செயல்பட்டு கோவா, மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது“ என்றார். அப்போது ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே லேசான வாக்குவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:–

மாநிலத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.60 ஆயிரத்து 350 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.47 ஆயிரத்து 186 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தை செலவு செய்யாதது ஏன்? உண்மையிலேயே அந்த மக்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இருந்தால் ஏன் செலவு செய்யாமல் மிச்சம் வைத்துள்ளது.

மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம்

ஆதிதிராவிடர் உள்பட அந்த மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று அரசு ஆய்வு செய்யாதது ஏன்?. இவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மாநிலத்தில் 165 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் பிரச்சினை உள்ளது. மக்கள் வேலை தேடி வெளியூர் செல்கிறார்கள்.

வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதுகுறித்து தனியாக விவாதிக்க சபாநாயகர் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.450 கோடி கொடுத்துள்ளது. அதை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாக அரசு சொல்கிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி இன்னும் பல விவசாயிகளுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை.

பயிர்க்கடன் தள்ளுபடி

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஜனவரி மாதம் வரை 44 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை செலவு செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து வருகிறார்கள். இந்த தற்கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நான் முதல்–மந்திரியாக இருந்தபோது வறட்சி நிலவியது. இதையடுத்து ரூ.3,600 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தேன்.

அதே போல் இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த அரசு இதை கண்டுகொள்ளவே இல்லை. கடனை தள்ளுபடி செய்யக்கூடாது என்பதற்காக மாநில அரசு, மத்திய அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தால் தாங்களும் கடனை தள்ளுபடி செய்ய தயார் என்று சொல்கிறது. இது சரியல்ல. இந்த அரசுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை இல்லை.

விவசாயிகளுக்கு உதவ வேண்டும்

நான் இப்போது கேட்கிறேன், கூட்டுறவு வங்கிகளில் உள்ள ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடனை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதன் மூலம் கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவ வேண்டும். மத்திய அரசை நோக்கி கை காட்டுவதை இந்த அரசு விட வேண்டும். முதலில் மாநில அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் முடிவை அறிவிக்க வேண்டும்.

அதன் பிறகு மத்திய அரசிடம் போய் கேளுங்கள். போராட்டம் நடத்துங்கள்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.

எதிர்ப்பு

அப்போது தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே எழுந்து பேசுகையில், “தேசிய வங்கிகளில் தான் விவசாயிகள் அதிகளவில் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். மத்திய அரசு இதில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்தால், மாநில அரசும் கடனை தள்ளுபடி செய்ய தயாராக இருக்கிறது என்று சித்தராமையா ஏற்கனவே கூறியுள்ளார்“ என்றார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்று மந்திரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மந்திரிகள் தேஷ்பாண்டே, பசவராஜ் ராயரெட்டி மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் நிலவியது.


Next Story