கடலூர்–விழுப்புரம் மாவட்டங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் 2–வது நாளாக நீடிப்பு காய்கறிகளின் விலை கிடு, கிடு உயர்வு

கடலூர்–விழுப்புரம் மாவட்டங்களில் லாரிகள் வேலை நிறுத்தம்
கடலூர்,
வாகனங்களுக்கான இன்சூரன்சு தொகை உயர்வை திரும்பப்பெற வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் செல்லவில்லை. அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு வரும் சரக்கு லாரிகளும், காய்கறி லாரிகளும் வரவில்லை.
வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வராததால் காய்கறிகள் விலை நேற்று உயர்ந்தது. நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.80–க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.120–க்கும், ரூ.20–க்கு விற்ற தக்காளி ரூ.25–க்கும், ரூ.24–க்கு விற்ற கேரட் ரூ.40–க்கும், ரூ.20–க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.40–க்கும் விற்றது. லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் மேலும் விலை உயரும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரூ.5 கோடிக்கு வர்த்தகம் பாதிப்புஇது குறித்து கடலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், பொருளாளர் சேகர் ஆகியோர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து 2–வது நாளாக 4 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது, லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காய்கறிகள் விலை உயரும், மணல், செங்கல், ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை உயருவதோடு கட்டுமான பணிகளும் பாதிக்கும் என்றனர்.
விழுப்புரம்விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 2 ஆயிரம் லாரிகள் நேற்று முன்தினம் ஓடவில்லை. தொடர்ந்து, நேற்றும் 2–வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 மணல் லாரிகள் மட்டும் நேற்று ஓடின. மற்ற 1,700 லாரிகள் ஓடவில்லை. இந்த லாரிகள் அனைத்தும் நெடுஞ்சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்கு அரிசி, காய்கறிகள், உரம் உள்ளிட்ட எந்த சரக்குகளையும் ஏற்றிச்செல்லவில்லை. அதுபோல் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு காய்கறிகள் வராததால் காய்கறிகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.