நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா
நெய்வேலி,
நெய்வேலியில் புகழ்பெற்ற வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் சிவசுப்பிரமணிய சுவாமி கையில் வில்லுடன் காட்சி அளிப்பது தனி சிறப்பாகும். மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு காலை 7 மணிக்கு மூலவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது.
கொடியேற்றம்பின்னர் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சிவ சுப்பிரமணியர், சிவன் பார்வதி, சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரத்தின் முன்பு காட்சி அளித்தனர். அதை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து பங்குனி உத்திர விழா கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அனைவரும் வேலுடையான்பட்டு முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர விழாவிழாவில் தினசரி காலையில் சிறப்பு அபிஷேகமும் ஆட்டுக்கிடா வாகனம், மயில், ரிஷப வாகனங்களில் சிவசுப்பிரமணியர் எழுந்தருளி வீதிஉலா வர இருக்கிறார். 4–ந்தேதி தெருவடைச்சான் சப்பரமும், 5–ந்தேதி முத்துரதத்தில் வீதிஉலாவும், 6–ந்தேதி முத்து இந்திர விமானம், 7–ந்தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 8–ந்தேதி தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.
9–ந்தேதி பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. இதில் சிவசுப்பிரமணிய சுவாமியை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால், பன்னீர், இளநீர் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதில் நெய்வேலியில் உள்ள அனைத்து வட்டங்கள் மற்றும் வடக்குத்து, வடக்குமேலூர், வானதிராயபுரம், வடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
தெப்ப உற்சவம்வருகிற 10–ந்தேதி தெப்ப உற்சவமும், 11–ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. தெப்ப உற்சவத்திற்கு குளத்தை தயார் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை குழாய் மூலம் கோவில் தெப்பக்குளத்திற்கு கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது.
கொடியேற்ற விழாவில் என்.எல்.சி. உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் மோகன், உற்சவ உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
திட்டக்குடிஇதேபோல் திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி சிவனுக்கும், அம்மனுக்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து யாக குண்டத்தில் இருந்து புனித நீர், கொடிக்கம்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கொடிக்கம்பத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்து கொடியேற்றப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சிவ சிவா என கோஷமிட்டு வழிபட்டனர். இதேபோல் திட்டக்குடி அடுத்த பெருமுளையில் உள்ள முத்தையா சுவாமி கோவிலிலும், மேலூர் மலையப்பர் கோவிலிலும் பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று கொடியேற்றப்பட்டது.