பிரம்மதேசம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை– பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பிரம்மதேசம் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை– பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிரம்மதேசம்,
திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் அருகே ஆலங்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29), லாரி டிரைவர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின்னர் அங்கிருந்து சுரேஷ் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டுப்போயிருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1¼ லட்சமாகும்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சுஇதுகுறித்து சுரேஷ், பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.