குடிநீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குஜிலியம்பாறை அருகே மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி அலவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குஜிலியம்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கருங்கல் ஊராட்சியில் உள்ளது சுக்காம்பட்டி கிராமம். இங்கு சுமார் 300–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது. இதற்கிடையில் ஊராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் சிலர் மின்மோட்டார் மூலம் குடிநீரை திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர். இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே முறைகேடாக மின்மிட்டோர் மூலம் தண்ணீர் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கருங்கல்லில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முறைகேடாக மின்மோட்டார் வைத்து குடிநீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், அனைத்து பகுதிக்கும் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.