நோயில்லா சமூகம்... நஞ்சில்லா உணவு....


நோயில்லா சமூகம்... நஞ்சில்லா உணவு....
x
தினத்தந்தி 2 April 2017 6:40 AM GMT (Updated: 2 April 2017 6:40 AM GMT)

அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து, ஐந்து ஆண்டுகளாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து,  ஐந்து ஆண்டுகளாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். அங்கு நான் பார்த்த வேலையில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பாதித்தேன். ‘நோயில்லா சமூகத்துக்கு நஞ்சில்லா உணவு தேவை’ என்பதை உணர்ந்ததால், பணம் கொழித்த வேலையை துறந்துவிட்டு, விவசாயம் செய்து வருகிறேன்.

விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களே பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில்,  வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தன்னந்தனியாக விவசாயத்தில் மும்முரமாக  ஈடுபட்டு வருகிறார், அமெரிக்காவாழ் இந்திய பெண் என்ஜினீயர் ஸ்ரீபிரியா.

இவர் கொடைக்கானல் கீழ்மலையான பெரும்பாறையை அடுத்து அமைந்துள்ள காமனூர் பகுதியில் பண்ணைவீட்டை அமைத் திருக்கிறார். அங்கு தங்கியிருந்து, 81 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். இயற்கை முறையிலேயே பயிர்களை விளைவித்து, விவசாயத்தை பெரும் சமூகப்பணியாக செய்துகொண்டிருக்கிறார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இவருக்கு ‘வேளாண்மை செம்மல்’ என்ற விருதினை வழங்கி கவுரவித்திருக்கிறது.

இதமான காலைப் பொழுதில் ஆரஞ்சு அறுவடை செய்துகொண்டிருந்த ஸ்ரீபிரியாவுடன் நமது உரையாடல்:

‘‘எனது தந்தை சீனிவாசகம் வங்கியில் பணிபுரிந்தவர். தாயார் சரோஜினி, தம்பி சுந்தர். நான் மதுரையில் பிறந்து வளர்ந்தேன். கணவர் வரதீஸ்வரன் என்ஜினீயர். திருமணத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று சிகாகோவில் குடியேறினோம். என் கணவர் அங்கு வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். நானும் அங்கு வேலை பார்த்தேன். எங்கள் மகள் பெயர் ரேணு.

சிகாகோவில் ஆதரவற்ற குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்த்தேன். அவர்கள் கிடைக்கும் பணத்தில் துரித உணவுகளை கண்டபடி சாப்பிட்டு குண்டாகிவிடுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, ரசாயனத்தால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், நஞ்சு உணவுகளை சாப்பிட்டு ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியமும், ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற இயற்கை முறை சாகுபடியில் இறங்கினேன். அமெரிக்காவிலேயே குத்தகைக்கு நிலத்தை பெற்று, அதில் விவசாயம் செய்தேன். அதில் விளைந்த காய்கறிகளை எங்கள் தேவைக்கு பயன்படுத்திவிட்டு, மீதம் இருப்பவைகளை அங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து வந்தேன். அதில் பெரும் ஆத்மதிருப்தி கிடைத்தது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறைந்துவருவதும் என்னை கவலைப்படுத்தியது. அதனால் சொந்த ஊருக்கு வந்து இயற்கை முறை விவசாயம் செய்ய ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து,  ஐந்து ஆண்டுகளாக விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். அங்கு நான் பார்த்த வேலையில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் சம்பாதித்தேன். ‘நோயில்லா சமூகத்துக்கு நஞ்சில்லா உணவு தேவை’ என்பதை உணர்ந்ததால், பணம் கொழித்த வேலையை துறந்துவிட்டு, விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன்’’ என்கிறார், ஸ்ரீபிரியா. ஆனால் சொந்த நாட்டில் விவசாயம் செய்யும் இவரது முடிவுக்கு உடனே குடும்பத்தில் இருந்து அனுமதி கிடைத்திருக்கவில்லை.



‘‘என் முடிவை முதலில் தந்தை எதிர்த்தார். காலப்போக்கில் அவரது முடிவில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. ஆனால் கணவர் என் முடிவை வரவேற்று, என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார். அவருடைய ஒத்துழைப்புதான் என்னை தன்னந்தனியாக இந்த அளவுக்கு சாதிக்க வைத்திருக்கிறது. என்னுடைய மகளுக்கும் விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் எம்.பி.பி.எஸ். படிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டு, அவள் வேளாண் கல்லூரியில் தோட்டக்கலை பற்றி படித்துக் கொண்டிருக்கிறாள். ஒருசில வருடங்களில் என் கணவரும் வெளிநாட்டு வேலையில் இருந்து விடைபெற்றுவிட்டு இங்கு வந்து, என்னோடு விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஸ்ரீபிரியா விவசாயத்தில் இறங்கி, படிப்படியாக சாதித்திருக்கிறார்.

‘‘மலைப்பகுதியில் 81 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். முதலில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டேன். அவை நன்கு வளர்ந்து வருகின்றன. 30 ஏக்கருக்கு காபி பயிரிட்டு உள்ளேன். மலைவாழை, சவ்சவ், ஆரஞ்சு, அவக்கோடா, மிளகு, பலா போன்றவற்றையும் சாகுபடி செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் இயற்கை முறையில் பராமரிக்கிறேன். பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதில்லை. ரசாயன உரம் போடுவதில்லை. இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துகிறேன். இயற்கையான முறையில் பூச்சிகளை அழிக்கின்றேன். வேம்பு, எருக்கு, குப்பைமேனி உள்பட 18 வகையான மூலிகைகளை கலந்து செடிகளுக்கு புத்துயிர் அளிக்கிறேன். அவைகளையே பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்துகிறேன். தற்போது 8 ஆயிரம் மலை வாழைகளை பயிரிட்டு உள்ளேன். நல்ல மகசூலை பெறமுடிகிறது’’ என்கிறார்.

மென்பொருள் என்ஜினீயரான இவருக்கு சிறுவயதில் இருந்தே விவசாயத்திலும் ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

‘‘என் தந்தை வங்கிப் பணியோடு, விவசாயமும் செய்து வந்தார். அதனால் எனக்கு சிறுவயதிலே விவசாயம் தெரியும். பின்பு வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு சென்று கூடுதலாக கற்றுத் தேர்ந்தேன். தோட்டக்கலை, காபி வாரிய அதிகாரிகளிடம் இருந்தும் இயற்கை முறையில் பயிர்களில் மகசூல் பெறுவதை பற்றி ஏராளமான தகவல்களை பெற்று வருகிறேன்.

நான் தன்னந்தனியாக 81 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்வதை கேள்விப்பட்ட விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார், என்னை சந்திக்க விரும்பினார். அதை தெரிந்து கொண்ட நான் உடனடியாக சென்று அவரை சந்தித்தேன். அவர் நிறைய அறிவுரைகள் வழங்கினார். பின்பு என்னுடைய தோட்டத்துக்கும் வந்தார். அனைத்து பயிர்களையும் பார்வையிட்டார்.

அப்போது, ‘அனைத்து பயிர்களுக்கும் வேளாண் பண்ணை இருக்கிறது. ஆனால், மலைத்தோட்ட பயிர்களுக்கு இல்லை. எனவே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் உன்னுடைய தோட்டத்தை வேளாண் பண்ணையாக மாற்றுவோம்’ என்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரை இழக்க நேரிட்டுவிட்டது. இது பேரிழப்பாகும். ஆனாலும் அவர் சொன்ன வழிமுறைகளை நான் அப்படியே விவசாயத்தில் கடைப்பிடிக்கிறேன்’’

இவர் தனியொரு பெண்ணாக விவசாய பணிகளில் ஈடுபடுவதால் எந்த தொந்தரவும் இல்லை என்கிறார்.

‘‘என்னுடைய தோட்டத்தில் 10 பேர் தினமும் வேலை செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் அனைத்து வேலைகளையும்  செய்வேன். இங்கு விளையும் அனைத்து பொருட்களையும் நானே தனியாக சொந்த வாகனத்தில் சந்தைக்கு எடுத்து செல்வேன். அதெல்லாம் எனக்கு பெரிய வி‌ஷயமாக தெரியவில்லை. ஆனால், சந்தையில் முதலில் சில சிரமங்களை சந்தித்தேன். இப்போது அந்த சிரமமும் இல்லை. இடைத்தரகர்களால் விவசாயிகள்  மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் கண்கூடாக பார்க்கிறேன். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.

நான் தனியாக இருப்பதாக ஒருபோதும் உணரவில்லை. இந்த தோட்டம் என்னுடைய உற்ற நண்பன். இது என் அன்னையின் மடி. சில நேரங்களில் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகின்றன. குறிப்பாக, சமீபத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டெருமைகள் பெருமளவு வாழையை சேதப்படுத்திவிட்டன. தற்போது காட்டுப்பன்றிகள் தொந்தரவு தருகின்றன. ஆனாலும் சகித்துக்கொண்டு விவசாயம் செய்கிறேன். காட்டு உயிரினங்களையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது’’ என்கிறார்.

விவசாயத்திற்கு அப்பாலும் இவர் சில பணிகளை செய்துகொண்டிருக்கிறார்.

‘‘என்னுடைய தோட்டத்தில் தங்கும் விடுதி கட்டுகிறேன். அதில் தங்குபவர்கள் இயற்கையை முழுமையாக அனுபவிப்பார்கள். அவர்கள் கண்முன்னே காய்கறிகளை பறித்து உணவு தயார் செய்து கொடுப்போம். இதன்மூலம் இயற்கை விவசாயத்தின் அத்தியாவசியத்தை அவர்களும் உணர்வார்கள். நான் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களையும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகளையும் சந்தித்து வருகிறேன். அவர்களிடம் இயற்கை விவசாயத்தை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைக் கிறேன். பலர் என்னை தேடிவந்தும் ஆலோசனை பெறுகிறார்கள்.

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்களிடம் போராட்ட குணம் இருப்பதால் யாருக்கும் அவர்கள் அச்சப்படவேண்டியதில்லை.  இலக்கை அடைய துணிந்து களம் இறங்க வேண்டும். எல்லா பெண்களும் விவசாயம் செய்ய முன்வரவேண்டும்’’ என்று தன்னம்பிக்கையூட்டும் விவசாயி ஸ்ரீபிரியா சமூக சேவையிலும் மிகுந்த அக்கறைகாட்டி வருகிறார். மக்கள் மூலிகைகளின் சிறப்பை உணர்ந்துகொள்ள மூலிகைப் பண்ணையும் அமைத்து வருகிறார்.

Next Story