சுங்கச்சாவடி கட்டணம், டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசே ஏற்க வேண்டும்

சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசே ஏற்க வேண்டும்
வேலூர்,
வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் விஜயகோவிந்தராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் 43 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 20 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச் சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 6 வழிச்சாலை அமைக்கப்பட்டிருப்பதோடு, தனியார் பஸ்களுக்கு மாத கட்டணம் ரூ.8 ஆயிரத்து 665 வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுங்கச் சாவடி கட்டண உயர்வின் படி ரூ.9 ஆயிரத்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடிகளில் தனியார் பஸ்களுக்கு ரூ.2 ஆயிரத்து 850–ல் இருந்து ரூ.5 ஆயிரத்து 575 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வாலாஜா, ஸ்ரீபெரும்புத்தூர் சுங்கச் சாவடிகள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சரிவர 6 வழிச்சாலை அமைக்கப்பட வில்லை. அதனால் 6 வழிச்சாலை அமைக்கப்படும் வரை பழைய சுங்கச் சாவடி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
மத்திய அரசுமேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதனை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகம் பஸ் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்கிறது. சுங்கச் சாவடி கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்றவைகளால் தனியார் பஸ்கள் கட்டணம் உயர்த்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் சுங்கச் சாவடி கட்டணம், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சுங்கச்சாவடி கட்டண மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில துணை தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் அகமது செரிப், நிர்வாகிகள் தயாளன், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.