குமரி மாவட்டத்தில் லாரிகள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்


குமரி மாவட்டத்தில் லாரிகள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 3 April 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று 2–வது நாளாக நடந்தது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதற்கும், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு அதிகப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 30–ந்தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகம், கேரளா உள்பட 6 மாநிலங்களில் நடக்கிறது. இதன் காரணமாக லாரிகள் ஓடவில்லை. குமரி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 1–ந்தேதி தொடங்கியது.

போராட்டத்தை            தீவிரபடுத்த...

இதைத்தொடர்ந்து ரப்பர், தேங்காய், சிமெண்டு, கல், கம்பி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லும் சுமார் 2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் இருந்து இயக்கப்படும் லாரிகள் அனைத்தும் அனாதைமடம் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் லாரிகள் ஷெட்டில் நின்றன.

குமரி மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 2–வது நாளாக நடந்தது. எனினும் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் இயக்கப்பட்டதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது கூறியதாவது:–

ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம்

தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குமரி மாவட்டத்திலும் கடந்த 1–ந்தேதி முதல் லாரிகள் இயக்கப்படவில்லை. எங்களது சங்கத்தில் 2,580 லாரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 2 ஆயிரம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரப்பர், தேங்காய், உப்பு, விறகு உள்ளிட்ட பொருட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றிச் செல்வது தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இருப்பினும், 500–க்கும் மேற்பட்ட லாரிகள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்கின்றன.

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த கட்டமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளையும் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலந்தாலோசித்து வருகிறோம். அனேகமாக நாளை (அதாவது இன்று) முதல் அந்த லாரிகளும் நிறுத்தப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளும் நிறுத்தப்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்டா மார்க்கெட்

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தாலும், நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் காய்கறிகள் இறக்குமதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘அப்டா மார்க்கெட்டுக்கு தினமும் 100 லாரிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் வழக்கம்போலவே வந்துகொண்டு இருக்கிறது. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் தட்டுப்பாடு ஏதும் இல்லை.

லாரிகள் வேலை நிறுத்தம் இன்னும் 2 நாட்கள் தொடர்ந்தால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

இதுபோல கோட்டார் மார்க்கெட்டிலும் பொருட்கள் வரத்து வழக்கம்போல இருந்தது.


Next Story