பொதுமக்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

டி.கல்லுப்பட்டி, யூனியனில் பொதுமக்கள், இளைஞர்கள் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்வரவேண்டும்
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதில் பேரையூர் அருகே உள்ள சந்தையூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் சீமைக்கருவேல மரங்களை சந்தையூர் கிராம மக்கள் அகற்றியதை பார்வையிட்டார். தொடர்ந்து ராவுத்தன்பட்டி மற்றும் எஸ்.லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து நீங்கள் அனைவரும் உங்கள் பகுதிகளில் உள்ளஅனைத்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற மற்றும் பொதுசுகாதாரத்தை பேணிகாக்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதே போல பாப்புரெட்டிப்பட்டி, காரைக்கேணி ஆகிய கண்மாய்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தன்னார்வ நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றுவதை பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:– இதுவரை மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 674 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
நீர் சேமிப்புஇதேபோல் அனைத்து இடங்களிம் உள்ள சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும். இதற்கு பொதுமக்களும் இளைஞர்களும் முன்வர வேண்டும். கண்மாய்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றினால் கண்மாய்களில் நீரை சேமித்து வைக்க முடியும். மழைநீர் சேமிப்பு மையமாகவும் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, பேரையூர் தாசில்தார் சிவக்குமார், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் லலிதா பரமேஸ்வரி, தாமோதரன், உள்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.