பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜனதா கட்சியினர் போராட்டம்


பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுக்கடைகளை முற்றுகையிட்டு பா.ஜனதா கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 19 April 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 164 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் முன்பு பா.ஜனதா கட்சியினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் டாஸ்மாக் கடைகளின் முன்பு பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். தேனியில் புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்து உள்ள டாஸ்மாக் கடை முன்பு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ள டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். சிலர் கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, மதுபான பாட்டில் போன்ற உருவபொம்மையை எரித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

164 பேர் கைது

ஆண்டிப்பட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் மாவட்ட பொதுச்செயலாளர் குமார் தலைமையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், போடியில் போராட்டம் நடத்திய 17 பேரும், கம்பத்தில் போராட்டம் நடத்திய 40 பேர், சின்னமனூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்திய 164 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், பெரியகுளம் தென்கரை, உத்தமபாளையம், தேவாரம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியகுளத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு கண்டன ஊர்வலமாக சென்றனர். முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story