நீலகிரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்


நீலகிரி மாவட்டத்தில் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 19 April 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த 158 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

சுப்ரீம் கோர்ட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்த மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பதிலாக வேறு இடத்தில் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

முற்றுகை

இதற்கிடையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், புதிய டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் பா.ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஊட்டி அருகே உள்ள தேனாடு கம்பையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

70 பேர் கைது

இதற்கு மண்டல தலைவர் பாபு தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் லோகநாதன், பரமேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி

இது போல் கோத்தகிரி கடைவீதியில் கோவில்களுக்கு அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மாநில அரசை வலியுறுத்தி கோத்தகிரி ஜீப் திடலில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் உதயகுமார், நகர செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசன், மாவட்ட துணை தலைவர் ராமசந்திரரெட்டி, அமைப்பு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மற்றும் அந்த கட்சியின் இளைஞரணியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூடலூர்

கூடலூர் காளம்புழா டாஸ்மாக் கடையை நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் பிரசார அணி மாவட்ட செயலாளர் பி.ஏ.சாமி, மாவட்ட துணை தலைவர் நளினி சந்திரசேகர், சோமு, சங்கர் உள்ளிட்ட பா.ஜனதாவினர் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இது தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மண்வயல் பஜாரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி பா.ஜனதா ஒன்றிய தலைவர் பிந்துராஜ் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நிர்வாகிகள் சிவக்குமார் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

பந்தலூர் தாலுகா நரிக்கொல்லியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா ஒன்றிய தலைவர் மகாதேவன் தலைமையில் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த உல்லாசன், தினகரன், சித்தார்த்தன், மோகன்தாஸ் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பா.ஜனதா நகர செயலாளர் சமமோகன், துணை தலைவர் தீபக்ராம், பொதுச்செயலாளர் அண்ணாதுரை, ரவி, அய்யப்பன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மொத்தம் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story