தண்ணீர் டேங்கர் லாரி–டிராக்டர் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்

டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை
கடத்தூர்,
கோபி அருகே ‘சீல்’ வைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆழ்குழாய் கிணறுகளுக்கு ‘சீல்’கோபி அருகே உள்ள என்.தொட்டிபாளையம், நஞ்சை கோபி, பாரியூர், வெள்ளாளபாளையம், புதுக்கரைப்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 17–ந் தேதி கோபி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் குமரேசனிடம் விவசாயிகள் கூறுகையில், ‘கோபி அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சி பகுதியில் தனியார் சிலர் நிலத்தடி நீரை அனுமதியின்றி தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்தப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோபி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தாசில்தார் குமரேசன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 6 ஆழ்குழாய் கிணறுகளை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனர்.
திடீர் வேலை நிறுத்தம்இதன்காரணமாக ‘சீல்’ வைக்கப்பட்ட 6 ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுகள், கடைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றுக்கும், கட்டிட பணிகள் உள்பட பல்வேறு தேவைகளுக்காகவும் தண்ணீர் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வீடுகளில் வசிப்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட 6 ஆழ்குழாய் கிணறுகளையும் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 25–க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் டிராக்டர் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் தங்களுடைய வாகனங்களை என்.தொட்டிபாளையம் பிரிவில் உள்ள விவசாய நிலத்தில் நிறுத்தி வைத்து உள்ளனர்.