டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 April 2017 4:45 AM IST (Updated: 23 April 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோத்தகிரி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடைக்கு மாற்று ஏற்பாடாக எம்.கைகாட்டி கிராம பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதிமக்கள் பெண்கள் உள்பட சுமார் 50–க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு நேற்று திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் டாஸ்மாக் ஊழியர்கள் அந்த பகுதியிலிருந்து டாஸ்மாக் மதுக்கடையை ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்றி அமைக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் ஒப்புக் கொண்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முடிவுக்கு வந்தது

இதே போல கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு பதிலாக ரைபிள் ரேஞ்ச் பகுதியில் கடை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் குடியிருப்புக்கள் அதிகமுள்ள அப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்பட்டதற்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதைத் தொடர்ந்து அந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story