20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பேரணி


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பேரணி
x
தினத்தந்தி 13 May 2017 1:01 AM IST (Updated: 13 May 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் பேரணி நடத்தினர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் கோரிக்கை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாநில துணை தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட தலைவர் நாகராஜு முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, மாநில துணை பொது செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

நாகை அவுரித்திடலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி தம்பிதுரை பூங்கா உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பேரணியில் தமிழக அரசு பணியாளர்களுக்கு உடனடியாக 8-வது ஊதியக்குழு மாற்றம் செய்து, அதுவரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்தமுறை மற்றும் வெளி ஆதார முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு, அந்த முறைகளில் பணி நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் பணியாளர்களில் 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியம்

வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து துறை அமைச்சு பணியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கடந்த கால ஊதிய குழுக்களில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரமும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பட்டு வளர்ச்சித்துறை பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், காவல்துறை மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பேரணியில் மாநில துணை தலைவர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகை மாவட்ட பொருளாளர் ரத்தின.அருள்வாசகன் நன்றி கூறினார்.

Next Story