நேருவின் விளக்கம்


நேருவின் விளக்கம்
x
தினத்தந்தி 13 May 2017 4:18 PM IST (Updated: 13 May 2017 4:18 PM IST)
t-max-icont-min-icon

பண்டித ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும்போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம் நேரு, நிறையப் புத்தகங் களில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவார்.

இது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஒருசமயம் அவரிடம் சிலர், “உங்கள் பேச்சுகள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் உண்டுபண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும்போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்?” எனக் கேட்டனர்.

அதற்கு நேரு அமைதியாகவும் புன்முறுவலோடும், “திருடுகிறேன்” என்றார்.
அதைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டுப் போயினர். தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். ‘பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே? எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை அவர் தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதித் தரும் குறிப்புகளை வைத்துப் பேசுகிறாரா?’ என்றெல்லாம் தங்களுக்குள் கேள்வி எழுப்பினர்.

நேரு புன்னகையுடன், “நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்பதில்லை. அதை என் உதவியாளர்தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார்.

ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம், சிலசமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும் இரண்டு மணி நேரத்தைத் திருடிக்கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்கச் செலவிடுகிறேன்” என்று நேரு சொல்லி முடிக்க, கிசுகிசுத்தவர் வாயடைத்துப் போயினர்.
-சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.


‘விதிவிலக்கு வேண்டாம்’

சபர்மதி ஆசிரமத்தில் உணவு உண்பதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டு முறை மணி அடிக்கப்படும். அதற்குள் உணவுக்கூடத்துக்கு வந்துவிடவேண்டும். தாமதமாக வருபவர்கள் உணவுக்கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்கவேண்டும். ஒருநாள் இரண்டாவது மணியடித்துச் சிறிதுநேரம் கழித்த பிறகே வந்தார் காந்திஜி. எனவே அவர் கதவருகே காத்திருந்தார்.

அதைக் கவனித்த சேவகர் ஒருவர் ஓடிவந்து, “பாபுஜி... தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்றார். ஆனால் அதை ஏற்க காந்திஜி மறுத்துவிட்டார். “ஆசிரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும் போல நானும் அவற்றைப் பின்பற்ற வேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால் நாளை மற்றவர்களுக்காகவும் அப்படித் தளர்த்த வேண்டியிருக்கும்” என்று கூறி பொறுமையாகவே காத்திருந்தார் காந்தியடிகள்.
-தா. பூர்விகா, வேலூர்.

சேவகம் புரிந்த காந்திஜி

அகிம்சை மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற முடியும் என்பதை வலியுறுத்தி வந்த நேரத்தில் காந்தியடிகள் இங்கிலாந்து சென்றார். அங்கு, தீவிரவாதத்தின் மூலமே சுதந்திரம் பெற முடியும் என்ற கருத்துடையவர்கள் காந்தியடிகளைத் தலைமை விருந்தினராய் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். காந்தியடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு முன் அங்கே சென்றார். அவருக்கு அழைப்பு விடுத்திருந்தவர்கள் அந்த நேரத்தில் அங்கில்லை.

அப்போது அங்கு இருந்தவர்களுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை. எனவே விழா ஏற்பாடுகளைக் கவனிக்க வந்திருக்கும் சக இந்தியர் எனக் கருதிக் கொண்டு காந்தியை வேலைவாங்கத் தொடங்கினார்கள். காந்தியடிகளும் சிரித்த முகத்துடன் தனக்கு ஏவப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்தார். அதற்குப் பிறகே அவரை அழைக்க வந்திருந்தவர்கள் அங்கு வந்தனர். பிறகுதான், சேவகம் புரிந்த அண்ணலே சிறப்பு விருந்தினர் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
-மேவானி கோபாலன்.

காமராஜரின் கேள்வி

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு அதிகாரி ஒருவர், ‘கட்டிடக் கலை நுணுக்கங் களைப் பற்றி அறிய வேண்டும். அதற்கு மேலைநாட்டு சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்’ என்று அனுமதி கேட்டிருந்தார். அந்த அதிகாரியை அழைத்த காமராஜர், “மதுரை, தஞ்சாவூர் கோவில் களை எல்லாம் பார்த்து இருக்கிறீர்களா? அவற்றைக் கட்டியவர்கள் எந்த நாட்டுக்குச் சென்று படித்தார்கள்? முதலில் அங்கேயெல்லாம் போய் கோவில்களைப் பார்த்துவிட்டு வாங்க. அப்புறம் அமெரிக்கா, லண்டன் எல்லாம் போகலாம்” என்றார் காமராஜர். அதிகாரியால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.
-ஏ. பாரூக் அலி, தூத்துக்குடி.


‘ஆசிரியராகப் போவேன்’

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் உரையாடிக் கொண்டிருந்த மைசூர் கல்லூரி மாணவர்கள், “நீங்கள் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெறாதது ஏன்?” என்று கேட்டனர். “வெளிநாடுகளுக்கு நான் மாணவனாகப் போகவில்லை. ஆனால் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகப் போவேன்” என்றார் ராதாகிருஷ்ணன். அதன்படியே, பிற்காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் அவரைத் தங்கள் பல்கலைக்கழகங்களில் உரையாற்றும்படி அழைப்பு விடுத்தன.
-பொ. மீனாட்சிசுந்தரம், கன்னியாகுமரி.

Next Story