மானாவாரி விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க ரூ.803 கோடியில் சிறப்பு திட்டம் வேளாண்மை அதிகாரி தகவல்


மானாவாரி விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க ரூ.803 கோடியில் சிறப்பு திட்டம் வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 14 May 2017 4:00 AM IST (Updated: 13 May 2017 7:32 PM IST)
t-max-icont-min-icon

மானாவாரி விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மானாவாரி விவசாயத்தில் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் பருத்தி பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்பு திட்டம் 2016–17–ம் ஆண்டு தொடங்கி 2019–20–ம் ஆண்டு முடிய 4 ஆண்டுகளில் ரூ.802.9 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த சிறப்பு திட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் இருந்து மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 1000 எக்டேர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒரு தொகுப்பாக தேர்வு செய்யப்படும். இதன்படி மொத்தம் 1000 தொகுப்புகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

5 லட்சம் ஏக்கர்

முதல் ஆண்டில் 200 தொகுப்புகளும், அடுத்த 2 ஆண்டுகளில் தலா 400 தொகுப்புகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதலாவது ஆண்டான இந்த ஆண்டு சிவகங்கை உள்பட 25 மாவட்டங்களில் 200 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுப்பிலும் மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு குழுக்களின் முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும். இத்திட்டத்தில் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு உழவு மானியம் வழங்கப்படும். மேலும் தானியம் மற்றும் சிறுதானிய பயிர்கள் 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கரிலும், பயறு வகை 2 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கரிலும், எண்ணெய் வித்துக்கள் 42 ஆயிரத்து 500 ஏக்கரிலும், பருத்தி பயிர் 30 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.

மானியத்தில் எந்திரங்கள்

மேலும் மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயறு உடைக்கும் எந்திரங்கள், செக்கு எந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு எந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பு இல்லாத கிராமப்புற இளைஞர்களை கொண்டு எந்திர வாடகை மையம் 80 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை வினியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக நிதியுதவி வழங்கப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி இன்றியமையாதது. எனவே மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து 5 அலுவலர்கள் வீதம் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 125 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்த 40 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் வட்டாரம் கம்பனூர் மற்றும் திருப்பத்தூர் வட்டாரம் துவார் கிராமங்களில் இந்த பயிற்சியை வேளாண்மை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.


Next Story