நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு குறைபாடுகள் காணப்பட்ட 20 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை,
மாணவ–மாணவிகளை தினமும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு அழைத்துச்செல்லும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்கள் தரமானதாக உள்ளதா? அரசு விதிமுறைகளின்படி பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டு உள்ளனவா? என்று ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இதையொட்டி தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நெல்லை பகுதியில் உள்ள 57 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் வேன், பஸ் உள்ளிட்ட 189 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது.
20 வாகனங்கள்...அதன்படி நேற்று 100–க்கும் மேற்பட்ட வாகனங்கள் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வாகனங்களை நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாராயணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் செங்குட்டுவன், நாகூர் கனி ஆகியோர் ஆய்வு செய்தனர். வாகனத்தில் உள்ள வேக கட்டுப்பாட்டு கருவி, முதல் உதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர வழி, படிக்கட்டு உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் டிரைவர், கிளீனரின் உரிமங்களையும் பார்வையிட்டனர்.
அப்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 20 வாகனங்களை, குறைபாடுகளை சரிசெய்து விட்டு கொண்டு வருமாறு திருப்பி அனுப்பினர். மேலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்படாத 3 வாகனங்களின் தகுதி சான்றிதழை வட்டார போக்குவரத்து அலுவலர் சசி ரத்து செய்தார்.
அனுமதி ரத்துமேலும் குறைபாடுகள் காணப்பட்ட வாகனங்களையும், ஆய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களையும் வருகிற 20–ந்தேதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், இல்லை என்றால் அவற்றின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், மாணவ–மாணவிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்த முடியாது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
இதுதவிர வாகனங்களில் இருக்கும் தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் பயிற்சி அளித்தனர். டிரைவர், கிளீனர்களுக்கு செயல்முறை ஒத்திகையும் நடத்திக் காட்டினர்.