கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 271 மனுக்கள் பெறப்பட்டன


கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 271 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 16 May 2017 4:00 AM IST (Updated: 16 May 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 271 மனுக்கள் பெறப்பட்டன.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் கார்டு(ரேஷன் கார்டு), முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 271 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை தீவிர ஆய்வு செய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஏரியை தூர்வார வேண்டும்

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டை கிராம மக்கள் கலெக்டர் ராஜேசிடம் கொடுத்த மனுவில், எல்லப்பன்பேட்டையில் 67 ஏக்கர் பரப்பளவில் இருந்த பெரியதுறை ஏரி தற்போது 11 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் மழைக்காலங்களில் கூட ஏரியில் நீர் இருப்பதில்லை. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே பெரியதுறை ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, அணை மற்றும் ஏரிக்கு செல்லும் பாதையையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாட்டு வண்டி தொழிலாளர்கள்

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்றதொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் மண்டல செயலாளர் திருமாறன், மாவட்ட செயலாளர் அறவாழி, அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் முன்னிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாயகிருஷ்ணன், சரவணன், பழனி உள்ளிட்டோர் கலெக்டர் ராஜேசிடம் கொடுத்த மனுவில், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிளாங்காடு ஆற்றுப்படுகையில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் 250 பேர் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. வறட்சியின்காரணமாக சேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைபெறவில்லை. இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே மணல் அள்ளி பிழைப்பு நடத்த கிளாங்காடு ஆற்றுப்படுகையில் மணல் குவாரிக்கு அனுமதி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story