கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு


கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 3 Jun 2017 2:30 AM IST (Updated: 2 Jun 2017 7:14 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

ஆண் குழந்தை மீட்பு

கோவில்பட்டி ரெயில் நிலையம்– இளையரசனேந்தல் ரெயில்வே கேட் இடையே உள்ள தியேட்டரின் பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள முட்புதரில் இருந்து நேற்று காலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள், அங்கு சென்று பார்த்தபோது ஒரு துணிப்பையில் அழகிய பச்சிளம் ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. பிறந்து ஒரு மாதமே ஆன அந்த குழந்தையை அவர்கள் தூக்கி வைத்துக் கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ரெயில் நிலைய மேலாளர் மனோகர், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த குழந்தையை மீட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் 108 ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள், அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குழந்தையை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றது யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை தாய் தவிக்க விட்டு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story