ஈளாடா தடுப்பணையில் நீர்மட்டம் உயர்கிறது கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதற்கு வாய்ப்பு

மழை காரணமாக ஈளாடா தடுப்பணையில் நீர்மட்டம் உயர்வதால், கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அடுத்தப்படியாக கோத்தகிரியும் முக்கியமாக உள்ளது. இங்குள்ள கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, நேரு பூங்கா ஆகியவற்றை தேடி, சீசன் காலங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் பருவமழை பெய்யாத காரணத்தால் பசுமையான மலை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் வனவிலங்குகளும் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போது மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த ஓடைகள், கிணறுகள், நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈளாடா தடுப்பணைஇந்த நிலையில் கோத்தகிரி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணையின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணை நிரம்பி வழியும் வாய்ப்புகள் உள்ளன. கோத்தகிரி நகரில் உள்ள சுமார் 3 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக கோடநாடு பகுதியிலுள்ள ஈளாடா தடுப்பணை உள்ளது. சுமார் 90 மீட்டர் நீளமும் 66 மீட்டர் அகலமும் சராசரியாக 6 அடி உயரமும் கொண்ட இந்த தடுப்பணை கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வறண்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோத்தகிரி பேரூராட்சி மூலம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் ஈளாடா தடுப்பணையை தூர்வாரி பக்கவாட்டு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது. தடுப்பணை முழுவதும் ஓரளவுக்கு தூர்வாரப்பட்டுள்ள நிலையில் பக்கவாட்டு சுவர் கட்டும் பணி மட்டும் சற்று தாமதமாக நடந்து வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்புதற்போது 12 அடி ஆழம் வரை தூர் வாரப்பட்டுள்ளதால் தடுப்பணையின் கொள்ளளவு முன்பு இருந்த 1 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை விட இரண்டு மடங்காக அதிகரித்து தற்போது 2 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. தற்போது இப்பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழை பெய்து வரும் காரணத்தால் ஈளாடா தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:– ஈளாடா தடுப்பணையிலிருந்து தூர்வாரப்பட்டு வெளியே வைக்கப்பட்டுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் பேரூராட்சியின் அனுமதியோடு எடுத்துச் சென்று தங்கள் தோட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது மழையின் காரணமாக ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் கோத்தகிரி நகரில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் கிடைக்கும். இது தவிர அணையின் பக்கவாட்டு சுவர் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும். அது முடிவடைந்தால் அதிகளவில் குடிநீரை தேக்கி வைக்க ஏதுவாம்.
இவ்வாறு அவர் கூறினார்.