ஓட்டப்பிடாரம் அருகே நீர் மேலாண்மை பிரசாரம்–விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் அருகே நீர் மேலாண்மை பிரசாரம்–விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:19 AM IST (Updated: 4 Jun 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே நீர் மேலாண்மை பிரசாரம்–விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பூவாணி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து நடத்திய நீர் மேலாண்மை பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் தலைமை தாங்கி பேசியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகளை பெருக்கி மானாவாரி பயிர் சாகுபடியில் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் இதுபோன்ற விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. வளைகுடா பகுதிகளில் மழைநீர் கிடைப்பதில்லை. ஆனால் நமது நாட்டில் மழைநீர் கிடைத்தும் அவற்றை சேமிக்க முடியாமல் கடலில் வீணாக கலக்கிறது. நம்மால் முடிந்தவரை கடலுக்கு செல்லும் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு

சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாய விளைபொருட்கள் உற்பத்தியை பெருக்கலாம். குளங்களில் மண் எடுப்பதன் மூலம் நீரின் சேமிப்பு அளவு அதிகரிப்பதால் குளங்களை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 402 கிராமங்களில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துறை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். நிலத்தடி நீரை பெருக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீரை அந்தந்த பகுதியிலேயே சேமிப்பதற்கு சிறிய குளம், குட்டைகளை ஏற்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50 கோடி இழப்பீடு தொகையும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.90 கோடி நிவாரணமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வறட்சியை போக்குவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் மழைநீரை சேமித்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரில் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்துஎழில், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் விஜயபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story