எனது தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது


எனது தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது
x
தினத்தந்தி 4 Jun 2017 4:32 AM IST (Updated: 4 Jun 2017 4:32 AM IST)
t-max-icont-min-icon

எனது தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என்று சித்தராமையா பேசினார்.

மைசூரு,

தேவேகவுடா உள்ளிட்ட முதல்–மந்திரிகள் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனது தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என்று சித்தராமையா பேசினார்.

பயனாளிகளுக்கு சலுகை வழங்கும் நிகழ்ச்சி

மைசூரு டவுன் மகாராஜா கல்லூரி வளாகத்தில் மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, ஹாசன், மண்டியா உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் சலுகைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில், மந்திரிகள் பரமேஸ்வர், தன்வீர் சேட், கிருஷ்ணப்பா, ஏ.மஞ்சு, யு.டி.காதர், ஆஞ்சநேயா, அம்பரீஷ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:–

கர்நாடகத்தில் எனது தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிந்து விட்டன. நான் முதல்–மந்திரியான பின்பு 5 முறையும், மந்திரியாக இருந்தபோது 7 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளேன்.

பட்ஜெட் தாக்கல் செய்வேன்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடப்பதற்குள் மீண்டும் ஒருமுறை பட்ஜெட் தாக்கல் செய்வேன். இன்று(அதாவது, நேற்று), தென் கர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் சார்பில் சலுகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி பயனாளிகளுக்கு சலுகை வழங்கும் நிகழ்ச்சி தான். அரசியல் மாநாடு அல்ல. கர்நாடக மக்கள் காங்கிரஸ் அரசின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்.

மாநில மக்கள் தான் எஜமானார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்யும் சேவகர்கள் ஆவார்கள். மக்களுக்கு சேவை செய்வது எங்களின் முதல் கடமை. நாங்கள் 4 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தோம், மாநில மக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுத்தோம் என்பதை தெளிவுபடுத்த தான் இந்த சலுகை வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

155 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தலுக்கு முன்பு நாங்கள் கொடுத்த 165 வாக்குறுதிகளில் 155 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீதமுள்ள 10 வாக்குறுதிகளையும் அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் நிறைவேற்றுவோம். இதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு என்ற பெயர் எனது தலைமையிலான அரசுக்கு கிடைக்கும்.

ராமகிருஷ்ண ஹெக்டே, பொம்மய்யி, ஜே.எச்.பட்டேல், தேவேகவுடா, தரம்சிங் ஆகியவர்கள் முதல்–மந்திரியாக இருந்த போது அவர்களது மந்திரி சபையில் நான் மந்திரியாக இருந்தேன். அவர்கள் கூட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி புத்தகத்தை குப்பை தொட்டியில் வீசி இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. நான் செய்யவும் மாட்டேன். எல்லா சாதி மக்களும் பயன்பெறும் வகையில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன்.

அன்னபாக்ய திட்டத்தின் கீழ் கர்நாடகத்தை பசியில்லாத மாநிலமாக்கும் கனவு நிறைவேறி உள்ளது. இந்த திட்டம் எனக்கு மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளாக மாநிலத்தில் கடும் வறட்சி நிலவினாலும், மக்கள் கர்நாடகத்தை விட்டு வெளியே செல்லாமல் உள்ளார்கள்.

பணம் எண்ணும் எந்திரம்

பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்ட போது, கடனை தள்ளுபடி செய்ய நாங்கள் என்ன பணத்தை அச்சடிக்கவா செய்கிறோம்? என்று எடியூரப்பா கேட்டார். பா.ஜனதாவினரிடம் பணம் அச்சடிக்கும் எந்திரம் இல்லை. ஆனால் பணத்தை எண்ணும் எந்திரம் உள்ளது.

வறட்சி பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற போது கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் முன்பு நிதி ஒதுக்குவது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நிதி உதவி வழங்கியது. அதுபோல மற்ற மாநிலங்களிலும் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உதவாதது ஏன்?. மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது.

கடன் தள்ளுபடி

வறட்சி பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை

என்று

எங்களை குறைகூறி வரும் எடியூரப்பா, பிரதமர் மோடியிடம் சென்று கர்நாடக விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய சொல்லட்டும் பார்க்கலாம். மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்தால், மாநில அரசும் கடனை தள்ளுபடி செய்ய தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

5 நாட்கள் பால் வழங்கும் திட்டம்

நேற்று நடந்த நிகழ்ச்சியில் 8 மாவட்டங்களை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மீதம் உள்ள பயனாளிகளுக்கு அந்தத்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ‘சீரபாக்ய’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் பால் வழங்கும் திட்டத்தையும் முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.


Next Story