கிருஷ்ணா, காவிரி நதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்திய விவகாரம்: சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர்–மந்திரி எம்.பி.பட்டீல் இடையே கடும் வாக்குவாதம்


கிருஷ்ணா, காவிரி நதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்திய விவகாரம்: சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர்–மந்திரி எம்.பி.பட்டீல் இடையே கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 8 Jun 2017 2:00 AM IST (Updated: 8 Jun 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணா, காவிரி நதிகளில் சிறப்பு பூஜைகளை நடத்திய விவகாரத்தில் சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கும், மந்திரி எம்.பி.பட்டீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சம் தடவை பூஜை நடத்துவேன் என்று மந்திரி எம்.பி.பட்டீல் ஆவேசமாக கூறினார். கர்நாடகத

பெங்களூரு,

கிருஷ்ணா, காவிரி நதிகளில் சிறப்பு பூஜைகளை நடத்திய விவகாரத்தில் சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கும், மந்திரி எம்.பி.பட்டீலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, லட்சம் தடவை பூஜை நடத்துவேன் என்று மந்திரி எம்.பி.பட்டீல் ஆவேசமாக கூறினார்.

கர்நாடகத்தின் ஜீவநதிகள்

கர்நாடக சட்டசபையில் நேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் விதி எண் 304–ன் கீழ் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கிருஷ்ணா, காவிரி ஆகியவை கர்நாடகத்தின் ஜீவநதிகள் ஆகும். இந்த நதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள் நடத்துவது நமது கலாசாரம், பரம்பரை மற்றும் நமது மதத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்த நதிகளில் நல்ல மழை பெய்ய வேண்டி நான் சிறப்பு பர்ஜன்ய பூஜைகளை நடத்தினேன். எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் இங்கு பேசும்போது, இது மூடநம்பிக்கை என்று கூறி அரசின் நிதியை தேவை இல்லாமல் செலவு செய்வதாக குறை கூறியுள்ளார். இது என் மனதுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சம்பிரதாயம் இல்லை

6 கோடி கன்னடர்களில் நானும் ஒரு சாமானிய கன்னடன். நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. நதிகளில் நடத்திய பூஜை செலவுகளை நானும், எனது நண்பர்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம். அங்கு பர்ஜன்ய பிரார்த்தனை மற்றும் பூஜைகளை மட்டுமே நடத்தினோம். நாங்கள் அங்கு எந்த ஹோமமும் நடத்தவில்லை. காவிரியில் நடத்திய பூஜையில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி கலந்து கொண்டார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

பூமி தாயுக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாயம். இதை மூடநம்பிக்கை என்று சொன்னால் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. மாநிலத்தில் அணைகள் நிரம்பும்போது அதற்கு பாகின பூஜை செய்வது என்பது நீண்ட காலமாக நடந்து வருகிறது. மாநில விவசாயிகள் மற்றும் மக்களின் நலனுக்காக கோவில்களில் பூஜை செய்வது என்பது புதிய சம்பிரதாயம் ஒன்றும் இல்லை.

அரசியல் உள்நோக்கம் கொண்டது

கர்நாடகத்தில் கடந்த காலங்களில் கடும் வறட்சி நிலவியபோது இந்து அறநிலையத்துறை சார்பில் நதி படுகையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த 5–ந் தேதி சட்டசபையில் பேசும்போது காவிரி மற்றும் கிருஷ்ணாவில் பூஜைகள் நடத்தியதை மூடநம்பிக்கை என்று கூறியது வருத்தம் அளிக்கிறது. அவர் முதல்–மந்திரியாக இருந்தபோது, நல்ல மழை பெய்ய வேண்டிய கோவில்களில் பூஜைகளை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது.

இதற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் செலவு செய்யப்பட்டது. பூஜைக்காக சுமார் ரூ.17 கோடி செலவாகி இருக்கும். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், அதை கண்டுகொள்ளாமல் கோவில்களில் பூஜை நடத்தப்பட்டது. இதை பார்க்கும்போது ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருக்கும் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. ஆதி காலத்தில் இருந்து இத்தகைய பூஜைகளை நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது.

திருப்பதியில் சிறப்பு பூஜைகள்

இஸ்ரோ விஞ்ஞானிகளும் சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் முயற்சி வெற்றி பெற திருப்பதியில் சிறப்பு பூஜைகளை நடத்தினர். நதிகளில் பூஜைகளை நடத்தியதால் என்னை ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். புதிய ராக்கெட் முயற்சி வெற்றிபெற பூஜை நடத்திய இஸ்ரோ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது மூடநம்பிக்கை என்று கூறி மத்திய அரசை கலைக்க வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறுவாரா?.

நாட்டில் ஜீவ நதிகளுக்கு புனிதமான மாண்பு உள்ளது. கங்கை, கோதாவரி, கிருஷ்ணா நதி படுகைகளில் கும்ப மேளாக்கள் நடைபெறுகின்றன. இதை மாநில அரசுகளே நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்து நடத்துகின்றன. நம்பிக்கை எவை, மூடநம்பிக்கை எவை என்று முதல்–மந்திரி சித்தராமையா சட்டசபையில் தெளிவாக கூறியுள்ளார்.

லட்சம் தடவை நடத்துவேன்

இதை எல்லாவற்றையும் பார்க்கும்போது ஜெகதீஷ் ஷெட்டர் கூறிய கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பது நிரூபணமாகிறது. மாநில மக்களின் நலன் கருதி இதுபோன்ற பூஜைகளை நடத்துவது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இது நமது கலாசாரத்தின் உண்மையான நிலை ஆகும். கிருஷ்ணா, காவிரி நதிகள் நமது தாயை போன்றவை ஆகும்.

தாய்க்கு பூஜை செய்வதை மூடநம்பிக்கை என்று சொன்னால், இத்தகைய பூஜையை லட்சம் தடவை வேண்டுமானாலும் செய்வேன் என்று மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

கடும் வாக்குவாதம்

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து பேசுகையில், “கிருஷ்ணா, காவிரி நதிகளில் பர்ஜன்ய ஹோமம் நடத்துவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதனால் அதை மூடநம்பிக்கை என்று கூறினேன். இப்போது அவர் பூஜைகள் செய்ததாக கூறுகிறார். இதை நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, பூஜைகள், ஹோமங்கள் நடத்துவதை மூடநம்பிக்கை என்று கூறி வருகிறது. மூடநம்பிக்கை தடை சட்டத்தை கொண்டு வருவது குறித்து இந்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் கிருஷ்ணா, காவிரியில் சிறப்பு பூஜைகள் செய்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் எங்கள் பக்கம் வந்துள்ளீர்கள்“ என்றார்.

அப்போது மந்திரி எம்.பி.பட்டீல் எழுந்து, நான் பூஜைகளை தான் செய்தேன். எந்த ஹோமத்தையும் நடத்தவில்லை என்றார். ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போது மந்திரி எம்.பி.பட்டீல் அடிக்கடி குறுக்கிட்டு பேசினார். அப்போது ஜெகதீஷ் ஷெட்டருக்கும், மந்திரி எம்.பி.பட்டீலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று எம்.பி.பட்டீலுக்கு ஆதரவாக பேசினர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்களும் பேசினர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் நிலவியது.

தவறு இல்லை

மந்திரி எம்.பி.பட்டீல் குரலை உயர்த்தி உணர்ச்சிமிகுதியோடு பேசினார். அதற்கு ஜெகதீஷ் ஷெட்டர், “கோவில்களில் பூஜை செய்தவர்கள் அமைதியாக இருப்பார்கள். நீங்கள் கோபத்துடன் பேசுகிறீர்களே. கொஞ்சம் அமைதியாக இருங்கள். நான் பேசி முடித்துவிடுகிறேன். அதன் பிறகு நீங்கள் பேசுங்கள்“ என்றார்.

இறுதியில் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார், “கிருஷ்ணா, காவிரி நதிகளில் பூஜை செய்தது ஒன்றும் தவறு இல்லை. நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பதால் எம்.பி.பட்டீல் இந்த பூஜைகளை செய்துள்ளார். இது நமது கலாசாரம். ஜெகதீஷ் ஷெட்டர், பூஜைகள் நடத்தியதன் மூலம் நீங்கள் எங்கள் பக்கம் வந்துள்ளீர்கள் என்று சொன்னார். நாங்கள் நாங்களாக தான் இருப்போம். நீங்கள் நீங்களாக தான் இருக்க முடியும்“ என்றார். அத்துடன் இந்த விவாதம் முடிவுக்கு வந்தது.


Next Story