மதுராந்தகம் அருகே ரெயில் மோதி குழந்தையுடன் தாய் பலி


மதுராந்தகம் அருகே ரெயில் மோதி குழந்தையுடன் தாய் பலி
x
தினத்தந்தி 9 Jun 2017 9:24 PM GMT (Updated: 2017-06-10T02:54:43+05:30)

மதுராந்தகம் அருகே ரெயில் மோதி குழந்தையுடன் தாய் பலியானார்.

செங்கல்பட்டு, 

மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். கொத்தனார். இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர்களுக்கு நிஷா என்ற 2 வயது குழந்தை இருந்தது. ரேவதி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். ரேவதி தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு ரெயில் தண்டவாளத்தை கடந்து ஓட்டிச்செல்வார். 

அதேபோல் நேற்று காலை 5½ மணியளவில் கணவரை வேலைக்கு அனுப்புவதற்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி விட்டு விடலாம் என்று கருதி 2 வயது குழந்தை நிஷாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு மாடுகளை ஓட்டிச்சென்றார்.

தாய், குழந்தை பலி 

தண்டவாளத்தை கடக்கும்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ரேவதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், குழந்தை இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

காலை 7 மணியளவில் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர் தண்டவாளத்தில் 2 பேர் இறந்து கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

9 மணி நேரத்திற்கு பின்னர் உறவினர்கள் தகவல் தெரிந்து வந்து புகார் தெரிவித்ததன் பேரில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story