பூஜை செய்வது போல் நடித்து பெண்ணிடம் நூதன நகை மோசடி

சென்னை சைதாப்பேட்டை பஜார் தெருவில் பெண்ணிடம் நூதன நகை மோசடி.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை பஜார் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் தினேஷ். இவர் நேற்று முன்தினம் வெளியில் சென்றுவிட்டார். கடையில் இவரது மனைவி ரஞ்சனா (வயது 40) இருந்தார்.
அப்போது கடைக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் கடையில் சிறப்பாக வியாபாரம் நடக்கவும், செல்வம் பெருகவும் விசேஷ பூஜை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய ரஞ்சனா பூஜை நடத்த சம்மதித்தார். உடனே கடைக்குள் சென்று அந்த ஆசாமி பூஜையை நடத்தினார்.
பூஜையில் ரஞ்சனா தனது 6 பவுன் தங்க நகைகளை கழற்றிவைத்தார். பூஜை நடந்து கொண்டிருக்கும்போது இன்னொரு மர்ம நபர் கடைக்கு வந்து பொருட்கள் வாங்குவது போல நடித்து ரஞ்சனாவின் கவனத்தை திசை திருப்பினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூஜை நடத்திய ஆசாமி ரஞ்சனாவின் 6 பவுன் தங்க நகைகளையும் நைசாக எடுத்துக்கொண்டார்.
பின்னர் பூஜை முடிந்த உடன் நகைகளுடன் அந்த ஆசாமி வெளியில் சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகு தனது நகைகள் காணாமல் போனதைக்கண்டு ரஞ்சனா அதிர்ச்சியடைந்தார். அதற்குப்பிறகு தான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுபற்றி ரஞ்சனா சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபோல் பூஜை செய்வதாக கூறி யாராவது மர்மநபர்கள் வீட்டிற்கோ அல்லது கடைக்கோ வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story