வாணியம்பாடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற 2 வாலிபர்களுக்கு அடி-உதை


வாணியம்பாடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற 2 வாலிபர்களுக்கு அடி-உதை
x
தினத்தந்தி 11 Jun 2017 4:45 AM IST (Updated: 11 Jun 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே வீடு புகுந்து திருட முயன்ற 2 வாலிபர்களை கிராம மக்கள் அடித்து உதைத்தனர். மேலும் கிராம மக்களை போலீசார் பிடித்து சென்றதால் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம், சிவிபட்டறை, குந்தாணிமேடு ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசில் பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர். அப்போது போலீசார் பொதுமக்களிடம், திருடர்கள் வரும்போது பிடித்து வைத்து தகவல் அளித்தால் வந்து கைது செய்வதாக கூறினர்.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 10 பேர் கொண்ட கும்பல் உதயேந்திரம் மேட்டுத்தெரு, ஆற்றோர பகுதியில் சுற்றியுள்ளனர்.

2 வாலிபர்களுக்கு அடி-உதை

இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது சசிக்குமார், பிரபாகரன் ஆகிய 2 வாலிபர்கள் மட்டுமே பொதுமக்களிடம் சிக்கினர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். பிடிபட்டவர்களை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து அவர்களை அழைத்து செல்ல முற்பட்டனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த 100-க்கும் மேற்பட்டோர் சசிக்குமாரையும், பிரபாகரனையும் மீண்டும் தாக்க முயன்றனர். அப்போது சசிக்குமார் இரும்பு ராடால் தாக்கப்பட்டார். பிரபாகரனும் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

மேலும் போலீசார், சசிக்குமாரை தாக்கியதாக கூறி 7 பேரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதனை அறிந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை தாலூகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை உடனே விடுவிக்க கோரியும், வீடு புகுந்து திருடும் கும்பலையும், மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைஅறிந்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, ராஜசேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இரும்பு ராடால் சசிக்குமாரை தாக்கிய வாலிபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உதயேந்திரத்தை சேர்ந்த பிரிட்டோ (வயது 20) என்ற வாலிபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 7 பேரை போலீசார் விடுவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story