பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3–ம் வகுப்பு மாணவி பலி

ஆற்காடு அருகே பள்ளிக்கு சென்ற சிறுமி அதே பள்ளியின் வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆற்காடு
ஆற்காடு அருகே பள்ளிக்கு சென்ற சிறுமி அதே பள்ளியின் வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிவேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் இலியாஸ். இவர் அந்த பகுதியில் காயலான் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மகள் பாத்திமாபானு (வயது 8) மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் பள்ளி வேனில் சென்று விட்டு வீடு திரும்புவாள்.
அதன்படி நேற்று பள்ளிக்கு செல்வதற்காக வேனை எதிர்பார்த்து பெற்றோருடன் அவள் காத்திருந்தாள். இதனையடுத்து வந்த பள்ளி வேனில் ஏறினாள். அந்த வேன் ரத்தினகிரி வரை சென்று அந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு செல்லும்.
நசுங்கி சாவுஇந்த நிலையில் வேன் ரத்தினகிரிக்கு சென்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மாணவி பாத்திமாபானு தனக்கு மயக்கம் வருவதுபோல் உள்ளது என வேனில் இருந்த ஆயா பானுவிடம் கூறியுள்ளாள். உடனே அவர் அது குறித்து டிரைவர் அசேனிடம் (27) கூறினார்.
இதனையடுத்து பாத்திமாபானு ஏறிய இடத்திலேயே வேனை டிரைவர் நிறுத்தினார். வேனிலிருந்து அவரை இறங்கி, வீட்டுக்கு செல்லும்படி ஆயா கூறினார். அதன்படி வேனில் இருந்து பாத்திமாபானு கீழே இறங்கினாள்.
பின்னர் வேன் புறப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பின்சக்கரத்தில் பாத்திமாபானு சிக்கி அலறியவாறு துடிதுடித்தாள். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் கூச்சலிடவே வேன் நிறுத்தப்பட்டது. பின்னர் டிரைவர் அசேன் பார்த்தபோது தனது வேனில் வந்த மாணவி பாத்திமாபானு சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் அசேன், ஆயா பானு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.