கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் பிரச்சினைஎட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தில் ஆதி திராவிட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சீவலப்பேரி திட்ட குடிநீரை ஏற்றி, 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்தனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக இக்கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
கிராம மக்கள் முற்றுகைமேலும், மாதாபுரத்துக்கு கிழக்கு பகுதியில் உள்ள இளம்புவனத்திலும், மேற்கு பகுதியில் உள்ள குமாரகிரிபுதூரிலும் சீவலப்பேரி குடிநீர் பிரதான குழாயில் இருந்து நல்லி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று மாதாபுரத்திலும் சீவலப்பேரி குடிநீர் பிரதான குழாயில் இருந்து நல்லி அமைத்து தர வேண்டும். மாதாபுரத்தில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.
கோரிக்கை மனுவிடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், செய்தி தொடர்பாளர் மனுவேல், ஒன்றிய செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அனிதாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.