ஏரி மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்

ஏரி மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
கீழ்பென்னாத்தூர்,
ஏரி மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசானது ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கியது. அதன்பேரில் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், கீழ்பென்னாத்தூரை அடுத்த செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிறுவனம் மூலமாக கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக உதவி கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை விடுத்தனர்.அதைத் தொடர்ந்து கோட்டான் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள உரிய நிபந்தனைகளுடன் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி அனுமதி வழங்கினார். இதையொட்டி நேற்று கீழ்பென்னாத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை உப தலைவர் எஸ்.எம்.ரமேஷ் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர் வரதராஜ், மேலாளர் (கரும்பு) வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் கோட்ட அலுவலர் அன்பரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து 4 விவசாயிகளுக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கும், தூர் வாருவதற்கான அனுமதி ஆணையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக அரசு ஏரிகளில் வண்டல் மண் எடுக்கவும், தூர் வாருவதற்கான அனுமதியை விவசாயிகளுக்கு அளித்துள்ளது. அதற்கான அனுமதி கேட்டு செம்பேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் முறையிட்டனர். அதன்பேரில் உரிய நிபந்தனைகளுடன் விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு நிலத்தை பண்படுத்தி கொள்ள வேண்டும். எனவே, மண்ணை வேறு பணிகளுக்கு பயன்படுத்தாமல் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதாலும், தூர்வாருவதாலும் மழைக்காலங்களில் நிலத்தடி நீர் மேம்படும். நீர் மட்டமும் உயரும்.இவ்வாறு அவர் பேசினார்.