திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 4 பேர் கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த சேலை கண்டிகை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை ஓட்டி வந்த புங்கத்தூரை சேர்ந்த விமல்ராஜ் (வயது 27), ரஜினி (25), ராஜ்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் திருவள்ளூர் கற்குழாய் தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மாட்டு வண்டியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த திருவள்ளூரை சேர்ந்த சுரேஷ் (33) என்பவரை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள்
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் மணல் கடத்தியதாக 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதி பாலாற்றில் இருந்து சென்னைக்கு கனரக லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பெருமாள்ராஜா தலைமையில் கனிம வளத்துறையினர் காஞ்சீபுரம் அருகே சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வாலாஜாவில் இருந்து மணல் கடத்தி வந்த 3 கனரக லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையொட்டி உதவி இயக்குனர் பெருமாள்ராஜா 3 லாரிகளையும் பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story