குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வேலாயுதம்பாளையம்,
புஞ்சைபுகழூர் பேரூராட்சி 11–வது வார்டுக்கு உட்பட்டது காந்திநகர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு புஞ்சைபுகழூர் பேரூராட்சி சார்பில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்தின் போது பலர் மின் மோட்டாரை பயன்படுத்தி அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் மேடான பகுதியில் அமைந்துள்ள காந்தி நகருக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதுமான குடிநீர் இன்றி கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் புஞ்சைபுகழூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அதிகாரிகளிடம் தங்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகிக்க வேண்டும். குடிநீர் வினியோகத்தின் போது மின்சாரம் தடை செய்து மின் மோட்டாரை இயக்கி அதிக தண்ணீர் உறிஞ்சாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக போதுமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.