கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள் முற்றுகை


கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள் முற்றுகை
x
தினத்தந்தி 10 July 2017 10:30 PM GMT (Updated: 10 July 2017 7:32 PM GMT)

கலசபாக்கம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கலசபாக்கம் தாலுகா கேட்டவரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மதுராகட்டவரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ– மாணவிகள், பெற்றோர், ஊர் பொதுமக்கள் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு சிலரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். கோரிக்கை மனு குறித்து மாணவ– மாணவிகள் கூறியதாவது:–

ஆசிரியர்கள் பற்றாக்குறை

எங்களது கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் நாங்கள் 142 பேர் படித்து வருகிறோம். எங்களுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்துகின்றனர். பள்ளியில் பல்வேறு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

பாடம் எடுக்கும் 2 ஆசிரியர்களும் தமிழ், சமூக அறிவியல் ஆசிரியர்கள். பிற பாடங்களான கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடத்தை கற்க முடியாமல் தவித்து வருகிறோம். எனவே இது குறித்து கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் பள்ளியில் அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்களும் இல்லை. இந்த பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். ஆசிரியர்கள் இல்லாததால் பல மாணவர்கள் இந்த பள்ளியை விட்டு விட்டு ஆதமங்கலம் புதூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு படை எடுக்கின்றனர். எங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிநீர் கேட்டு

வேங்கிக்கால் புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் சுமார் 1,500 பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தண்ணீர் இல்லாமல் பல கால்நடைகள் இறந்து விட்டன. மீதம் உள்ள கால்நடைகளை வளர்க்க முடியாமல் தவித்து வருகிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள மனுவில், ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் சுமார் 500 பேர் பணியிழந்து காணப்படுகிறோம். எங்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

தூய்மைப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

வேலை உறுதிசட்டம் இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலத்தில் தூய்மை பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நாங்களும் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அதில் மக்கள் குறை தீர்வு கூட்டம் தாலுகா அளவில் நடைபெற வேண்டும். வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்’’ என்றனர்.


Next Story