பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் அவசியம் உதவி வேளாண்மை இயக்குனர் பேச்சு


பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் அவசியம் உதவி வேளாண்மை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 14 July 2017 4:00 AM IST (Updated: 14 July 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் முதலீட்டிற்கு பாதுகாப்பு அளித்திட பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் அவசியம் என உதவி வேளாண்மை இயக்குனர் பேசினார்.

திண்டிவனம்,

திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் புதிய பயிர் பாதுகாப்பு திட்ட பதிவு முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் கென்னடி ஜெயக்குமார் கலந்து கொண்டு பயிர்காப்பீட்டு பதிவு படிவங்களை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வெள்ளம், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல்கள், நிலத்தடி நீரில் உவர்தன்மை அதிகரித்தல் போன்றவற்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட விவசாய உற்பத்தியை அதிகரித்திடும் நோக்கில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தொகையை வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், மணிலா, மக்காசோளம், உளுந்து, மரவள்ளி, மஞ்சள் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திடலாம். எனவே பயிர் காப்பீடு செய்திட விரும்பும் விவசாயிகள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமைச்சான்று அல்லது அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.472, மணிலா ரூ.420, கம்பு ரூ.150, மக்காச்சோளம் ரூ.280, பருத்தி ரூ.1,000, மரவள்ளி ரூ.651, வாழை ரூ.1,176, மஞ்சள் ரூ. 687 என பிரீமியத் தொகையை தி நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பேரில் வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண் கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விண்ணப்பம் அளித்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே விவசாயிகளின் முதலீட்டிற்கு பாதுகாப்பு அளித்திட பயிர் பாதுகாப்பு காப்பீட்டு திட்டம் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் வேளாண்மை அலுவலர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், கதிரேசன், தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் மோகன்குமார், யமுனா, விஜயலட்சுமி, மஞ்சு மற்றும் கட்டளை, கோவடி, தென்நெற்குணம், தென்பசியார், தென்களவாய், ஜக்காம்பேட்டை, கர்ணாவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story