போதை பொருட்கள் மொத்த வியாபாரி கைது சிதம்பரம் போலீசார் அதிரடி நடவடிக்கை


போதை பொருட்கள் மொத்த வியாபாரி கைது சிதம்பரம் போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 16 July 2017 4:30 AM IST (Updated: 16 July 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

போதை பொருட்கள் மொத்த வியாபாரியை சிதம்பரம் போலீசார் சென்னையில் வைத்து மடக்கி பிடித்து, கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிதம்பரம்,

சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் கடந்த 12-ந்தேதி நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கொத்தவால் தெருவைச் சேர்ந்த அப்துல்ரகுமான் மகன் முகமது மைதீன்(வயது 52) என்பவருக்கு சொந்தமான சிதம்பரம் ஓமகுளம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஒரு குடோனில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முகமது மைதீனை சிதம்பரம் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிராஜ் மகன் கவுதம்ராஜ்( 29) என்பவர், போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக தன்னிடம் மொத்தமாக விற்றதாக முகமதுமைதீன் போலீசிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், கவுதம்ராஜை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சிதம்பரம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன், தலைமை காவலர் திலீப் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு, நேற்று காலை வேப்பேரியில் உள்ள அவரது வீட்டின் அருகே கவுதம்ராஜை மடக்கி பிடித்து, கைது செய்தனர். பின்னர் அவரை சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கவுதம்ராஜ் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் போதை பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளார். அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்த போது போலீசில் சிக்கிஉள்ளார்.

மேலும் கவுதம்ராஜிக்கு எங்கிருந்து போதை பொருட்கள் வருகிறது, இவருக்கு பின்னால் யார்? யார்? உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

பிரபல போதை பொருட்கள் வியாபாரியை கைது செய்த, சிதம்பரம் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

Next Story