இலக்கை நோக்கி இனைந்த கரங்களாய்...


இலக்கை நோக்கி இனைந்த கரங்களாய்...
x
தினத்தந்தி 16 July 2017 12:30 PM IST (Updated: 16 July 2017 12:30 PM IST)
t-max-icont-min-icon

இவர் பெயரில் மட்டும் புதுமையானவர் அல்ல, வாழ்க்கையிலும்! நடனம், சங்கீதம், சதுரங்கம், டைரக்‌ஷன் என பல துறைகளில் கால் பதித்திருப்பவர்.

வர் பெயரில் மட்டும் புதுமையானவர் அல்ல, வாழ்க்கையிலும்! நடனம், சங்கீதம், சதுரங்கம், டைரக்‌ஷன் என பல துறைகளில் கால் பதித்திருப்பவர். இவர் தனது மகனுக்குள் இருக்கும் தனித்திறமைகளை கண்டறியும் தாயாக மட்டுமல்லாமல், அவனுடன் இணைந்து அவனுக்கு பிடித்தமான விஷயங்களை தானும் கற்றறிந்து முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார்.

ஹோத்ரா, இசை ஆசிரியை. சென்னை மேற்கு மாம்பலத்தில் மகன் ஜெய்சுதன் மற்றும் அம்மாவுடன் வசித்து வருகிறார். ஜெய் சுதன் மாந்தோப்பு
ரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். 7 வயதில் சிறந்த குறும்பட தொகுப்பாளர், 8 வயதில் ஸ்கேட்டிங் சாதனையாளர், 9 வயதில் சவுண்ட் என்ஜினீயரிங் பற்றி தெரிந்து தானே பாடி, நடித்து, இசையமைத்து குறும்படம் தயாரித்தவர், 10 வயதில் குழந்தை நட்சத்திரம், 11 வயதில் பாடகர் என வயதுக்கு ஏற்ப தனது திறமைகளை மெருகேற்றிக் கொண்டிருக்கிறான். அதற்கு பின்புலமாக இருந்து ஹோத்ரா, மகனை பட்டைதீட்டிக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும், மகனை சாதனையாளனாக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துகொள் கிறார்.

“எனது தந்தை ரவிக்குமார், தாயார் சந்திரா. எனது சொந்த ஊர் நெய்வேலி. மூன்று வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது வெளி இடங்களுக்கு சென்று நாட்டிய நிகழ்ச்சி களில் பங்கேற்க தொடங்கினேன். அடுத்து எந்த கலையை கற்கலாம் என்று யோசித்தபோது சங்கீதம் பொருத்தமான தேர்வாக அமைந்தது. எனது அம்மாவுக்கும் இசை மீது ஈடுபாடு இருந்ததால் அதனை கற்றுக்கொள்வதற்கு ஊக்குவித்தார். என் பெரியம்மா மரகதமும் என் வளர்ச்சிக்கு துணை புரிந்தார்”

ஹோத்ரா என்ற பெயரே வித்தியாசமாக இருக் கிறதே?

“ஹேமலதா என்பது எனது இயற்பெயர். குரு பெயர்ச்சியின்போது கணக்கிடும் குருஓரையை வடமொழியில் குருஹோரா என்று அழைக்கிறார்கள். அதை சார்ந்து எனக்கு இந்த புதிய பெயரை நானே சூட்டிக்கொண்டேன். ஹோத்ரா என்பது அக்னி ஜூவாலை என்று பொருள்படும்”

உங்கள் கல்லூரி காலத்து கனவு என்னவாக இருந்தது?

“நான் இசைக்கல்லூரியில் படித்தேன். பண்ணிசை யாளராகி, இசையை ஆழ்ந்து கற்று பல்கலைக்கழக அளவில் வாய்ப்பாட்டில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றேன். கிராமியகலைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கற்ற இசை, நடனத்தை கிராமியகலைகளில் வெளிப்படுத்தி பரிசுகளை குவித்தேன். பானை மீது ஏறி நின்று கிராமிய நடனம் ஆடி தங்கப்பதக்கம் வென்றிருக்கிறேன். கிராமிய பாடலை வெறும் கையால் தாளம் போட்டு பாடி மாநில அளவில் முதலிடம் பெற்றேன். மாநில அளவில் வீணை போட்டியிலும் முதலிடம் பிடித்தேன். செஸ் போட்டியில் ஐந்து முறை மாநில அளவில் விருது பெற்றிருக்கிறேன். நம் முன்னோர்களால் போற்றி பாதுகாக்கப்பட்ட கிராமிய பாடல்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதற்காக நிறைய கிராமிய பாடல்களை பாடி ஆல்பமாக பதிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். சிவபெருமானுக்கு பிடித்தமான ரேவதி ராகத்தில் திருவாசகத்தை பாடி சி.டி.களாக வெளியிட்டும் இருக்கிறேன்”

உங்கள் மகனை வளர்த்து ஆளாக்கும் வாழ்க்கைக் கனவு என்னவாக இருந்தது?

“பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கல்யாண வாழ்க்கை அவ்வளவு இனிப்பானதல்ல. நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும்போதே மருத்துவர்கள் உங்களின் உணர்வுகளை வயிற்றில் இருக்கும் குழந்தை புரிந்து கொள்ளும். நீங்கள் பேசுவதை கேட்கும் என்றார்கள். நான் பாடல்களை பாடி கர்ப்பத்தில் இருந்த குழந்தையை உற்சாகப் படுத்தினேன். பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறாமல் போனதில் சின்ன வருத்தம்தான். ஆண் பிள்ளையாக பிறந்ததால் அவனை உலக அளவில் சாதனையாளனாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதிலும் அவன் கலைத்துறையில் கால்பதித்து சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அவன் ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே கீபோர்ட்டை நோக்கி தவழ்ந்து சென்றான். நான்கு வயதில் போட்டோ எடுக்க ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்றிருந்தபோது போட்டோஷாப் தொழில்நுட்பம் பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டான். அங்குள்ளவர்கள் அவனுக்கு கணினி நுட்ப அறிவுத் திறன் அதிகம் இருக்கிறது. கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்குமாறு கூறியதையடுத்து அதில் சேர்த்துவிட்டேன். மல்டிமீடியா தொழில் நுட்பங்களை கற்றறிந்தான்.

பின்னர் கலைத்துறையில் சிறுவர்கள் அதிகம் சாதிக்காத துறையை தேர்ந் தெடுத்து பயிற்சி அளிக்க முடிவு செய்தேன். அதற்கான தேடலின்போது 14 வயதில் சிறுவர்கள் படதொகுப்பாளராக கின்னசில் இடம்பெற்றிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆறு வயதிலேயே அவனை தனியார் திரைப்பட கல்லூரியில் படத்தொகுப்பாளர் பயிற்சியில் சேர்க்க அழைத்து சென்றேன். சிறுவனாக இருப்பதால் முதலில் சேர்க்க மறுத்துவிட்டார்கள். ஏற்கனவே கணினி பயிற்சி பெற்றிருக்கும் விஷயத்தை கூறியதும், 5 நிமிடம் ஓடும் காட்சியை காண்பித்து அதனை எடிட்டிங் செய்யுமாறு கூறினார்கள்.

ஒரு குழந்தை தரையில் தவழுவது போலவும், அந்த நேரத்தில் விமானம் பறப்பது போலவும், அக்குழந்தையின் அம்மா ஓடோடி வந்து குழந்தையை தூக்கி கொஞ்ச, அது மகிழ்வதாகவும் அந்த காட்சி அமைந்திருந்தது. இவனோ குழந்தை தரையில் தவழுவதையும் - விமானம் பறக்க தொடங்குவதையும் ஒப்பிட்டு எடிட்டிங் செய்தான். அம்மாவை பார்த்து அந்த குழந்தை மகிழ்வதற்கு பதிலாக, விமானம் மேல பறந்து செல்வதை பார்த்து அந்த குழந்தை சிரிப்பதுபோல் காட்சிகளை தொகுத்தான். அவனுடைய சிந்தனை திறனை பாராட்டி, பயிற்சியில் சேர்த்துக்கொண்டார்கள். எடிட்டிங் பயிற்சிக்கு அழைத்து செல்வதோடு எனது பணியை நிறுத்திக்கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து நானும் ஆக்டிங், டைரக்டர் பயிற்சி பெற தொடங்கினேன். என் தம்பி ரமேஷ் எங்களோடு சேர்ந்து டைரக்‌ஷன் பயிற்சி பெற்றான். இப்படி குழுவாக பயிற்சி பெற்றதால் என் மகனின் திறமைகளை மெருகேற்றுவது எளிதாக இருந் தது.

சென்னையில் அரசு சார்பில் நீர்வளத்தை பாதுகாத்தல் சம்பந்தமாக நடந்த குறும்பட போட்டியில் தண்ணீர் சிக்கனம் குறித்து ‘நீ தானம்மா சொன்ன!’ என்ற குறும்படத்தை தயாரித்தோம். அந்த படத்துக்கு சிறந்த பட விருதும், என் மகனுக்கு சிறந்த எடிட்டருக்கான சான்றிதழும் கிடைத்தது. இதையடுத்து எடிட்டிங் பற்றி முழுமையாக படிக்க வைத்தேன். பாட்டு, நடனம், நடிப்பு, இசை, எடிட்டிங் என அனைத்து திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக அவனே பாடி, ஆடி, இசையமைத்த வீடியோ ‘பாத்ரூம் சிங்கர்’ என்ற பெயரில் யூடியூப்பில் பரவி பாராட்டை பெற்றது. ஒரே துறைக்குள் மட்டும் கவனம் செலுத்தாமல் ஸ்கேட்டிங் பயிற்சியும் கொடுத்தேன். அதனை ஒரு மாதத்திலேயே நன்றாக கற்று தேர்ந்து மாவட்ட அளவிலான போட்டியில் 3-வது இடத்தை பிடித்தான். நாதஸ்வரம், வீணை, நடனமும் கற்று தேர்ந்திருக்கிறான். ஒரு படத்தில் நடித்திருக்கிறான், பின்னணி யும் பாடி இருக்கிறான். இப்போது டைரக்‌ஷன் பயிற்சி பற்றி கற்கிறான்”

மற்ற சிறுவர்களை போல் விளையாடி மகிழ வேண்டிய வயதில் இயல்புக்கு மாறாக அவனை சாதனைகளை நோக்கி நகர்த்திச் செல்கிறீர்களா?

“சிறுவயதில் இருந்தே துறுதுறுவென வலம் வந்த அவனை சாதனையாளனாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும் அவன் விருப்பப்படியே செயல்பட விடுகிறேன். மற்றவர்களை போல மழையில் நனையக்கூடாது, மண்ணில் விளையாடக்கூடாது என்று கண்டிப்பதில்லை. அவனை விளையாடவும் அனுமதிக்கிறேன்”

உங்கள் குழந்தையை போன்று நீங்கள் பணியாற்றும் பள்ளிக்கூட குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளையும் கண்டறிகிறீர்களா?


“திறமை உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பதை நான் சேவையாக கருதுகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன்”

மகனுக்காக தனது தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்த தாயாக உங்களை நீங்கள் கருதுகிறீர்களா?

“எனக்கு என் மகன்தான் உலகம். அதேவேளையில் அவன் என்னை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அவனை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் தாயாக என் கடமைகளை செய்து வருகிறேன். 18 வயதுக்கு மேல் எதிர்கால வாழ்க்கை, திருமணம் பற்றி அவன் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படும்போது அவன் விருப்பங்களுக்கு தடையாக இருக்க மாட்டேன். அவனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கும் மன நிறைவே எனக்கு போதுமானது. அவனோடு சேர்ந்து நானும் வளர்கிறேன் என்பது எனக்கு மன நிறைவைத் தருகிறது”

கணவரை பிரிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலைகள் என்ன? அதில் இருந்து மீண்டு வர நீங்கள் வழங்கும் வழிகாட்டுதல் என்ன?

“பெண்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை ஜொலிக்காதபோது தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கருதி மூலையில் முடங்கிவிடக்கூடாது. கணவனை பிரிந்த பெண்களின் நிலை எனக்கு தெரியும். அவர்கள் கவலைகள் தீர எனது அனுபவத்தின் வாயிலாக கவுன்சலிங் வழங்கி இருக்கிறேன். அதோடு நின்றுவிடாமல் அவர்கள் வாழ்வாதாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக கைத்தொழில்களையும் கற்றுக்கொடுத்து இருக்கிறேன். வலி வேதனைகளை கண்டு துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்” என்கிறார், ஹோத்ரா!

Next Story