கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 3 கிராம மக்கள் முற்றுகை அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை


கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 3 கிராம மக்கள் முற்றுகை அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 2:30 AM IST (Updated: 3 Aug 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

சாலை, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 3 கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

சாலை, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 3 கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள்

எட்டயபுரம் தாலுகா இளம்புவனம் பஞ்சாயத்து சோத்துநாயக்கன்பட்டியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் கிடைக்க பெறாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அங்குள்ள தோட்டங்களில் இருந்து தண்ணீரை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

இதேபோன்று குளத்துல்வாய்பட்டியில் சேதமடைந்த வாறுகாலை சீரமைக்காமல் தனிநபர் அடைத்து விட்டார். இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த வாறுகாலை தூர்வார வேண்டும்.

யூனியன் அலுவலகம் முற்றுகை

எனவே குடிநீர் வசதி செய்து தர வேண்டும், வாறுகாலை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமையில், கிராம மக்கள் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

தாலுகா குழு உறுப்பினர்கள் பாலமுருகன், மாரிமுத்து உள்பட சோத்துநாயக்கன்பட்டி, குளத்துவாய்பட்டி ஆகிய கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்று கொண்ட அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

வில்லிசேரி மக்கள் முற்றுகை

பின்னர், கோவில்பட்டி அருகே வில்லிசேரி வடக்கு தெரு, மேல காலனி பகுதிகளில் சாலை, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, அந்த கிராம மக்கள் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். சிறிது நேரத்தில் யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


Next Story