மசினகுடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


மசினகுடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மசினகுடி,

மசினகுடியை சேர்ந்தவர் புட்ராஜ். இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சரிகா. இவர்களுக்கு ஸ்ரீசாந்த் சஞ்சய் (9), ஹர்சித் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளன.

புட்ராஜ் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று புதிய வீட்டில் புதுமனை புகுவிழா வைத்து இருந்தார். இதற்கான வீட்டை சுற்றியும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் புதிய வீட்டில் அலங்கார மின்விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் புதிய வீட்டுக்கு புட்ராஜ் தனது 2-வது மகன் ஹர்சித்தை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு புட்ராஜ் மற்றும் உறவினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். ஹர்சித் விளையாடி கொண்டு இருந்தான்.

இந்த நேரத்தில் புதிய வீட்டின் முன்பு போடப்பட்டு இருந்த அலங்கார மின்விளக்கை பிடித்து ஹர்சித் விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து ஹர்சித் தூக்கி வீசப்பட்டான். தூக்கி வீசப்பட்டதில் மயங்கிய ஹர்சித்தை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஊட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைகாக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஹர்சித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். புதிதாக குடியேற வேண்டிய வீட்டில் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story