ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் கோவையில், ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் கைது


ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் கோவையில், ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 4:45 AM IST (Updated: 6 Aug 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி கார் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசப்பட்டது. இதில் அவரது காரின் கண்ணாடியும், பாதுகாப்புக்கு சென்றவர்களின் கார் கண்ணாடிகளும் உடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்தும், கல் வீசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கோவை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் தரையில் உட்கார்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மயூராஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற ராகுல்காந்தியை குறிவைத்து மதவாத பா.ஜனதா கட்சி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா கட்சி இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி தகுந்த பதிலடி கொடுக் கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணக்குமார், மகேஸ்குமார், காலனி ஆர்.வெங்கடாசலம், சவுந்திரகுமார், சி.ஆர்.ரவிச்சந்திரன், ராம்கி, மதுசூதனன், சாய்சாதிக், காந்தகுமார், வக்கீல் கருப்பசாமி, காமராஜ்துல்லா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்று ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர் களை போலீசார் இரவில் விடுவித்தனர்.

Next Story