பெங்களூருவில், 125 வார்டுகளிலும் 16–ந்தேதி முதல் இந்திரா மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் முதல்–மந்திரி பேட்டி


பெங்களூருவில், 125 வார்டுகளிலும் 16–ந்தேதி முதல் இந்திரா மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் முதல்–மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2017 3:00 AM IST (Updated: 6 Aug 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 125 வார்டுகளிலும் வருகிற 16–ந் தேதி முதல் இந்திரா மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் 125 வார்டுகளிலும் வருகிற 16–ந் தேதி முதல் இந்திரா மலிவு விலை உணவகம் செயல்பட தொடங்கும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

சித்தராமையா ஆலோசனை

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளிலும் மலிவு விலையில் இந்திரா உணவகம் தொடங்கப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்து இருந்தார். இதையடுத்து, இந்திரா மலிவு விலை உணவகம் அமைக்கும் பணிகள் பெங்களூரு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திரா மலிவு விலை உணவகம் அமைப்பது தொடர்பாக பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

16–ந் தேதியில் இருந்து...

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளிலும் குறைந்த விலையில் இந்திரா உணவகம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 12–ந் தேதி அறிவித்து இருந்தேன். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தேன். ஒரு வார்டுக்கு ஒரு இந்திரா உணவகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. போதிய இடவசதிகள் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் சில குறிப்பிட்ட வார்டுகளில் இந்திரா உணவகம் அமைக்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் 125 வார்டுகளில் இந்திரா உணவகம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த 125 வார்டுகளிலும் வருகிற 16–ந் தேதி இந்திரா உணவகம் செயல்பட தொடங்கும். முதலில் 15–ந் தேதி இந்திரா உணவகம் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று சுதந்திர தினம் என்பதால், 16–ந் தேதி முதல் 125 வார்டுகளிலும் இந்திரா உணவகம் செயல்பட தொடங்கும்.

ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

இந்திரா உணவகம் மூலம் தினமும் குறைந்த விலையில் இட்லி, எலுமிச்சை சாதம், சாப்பாடு, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் விற்கப்படும். ஏழை, எளிய மக்கள் என 3 லட்சம் பேர் தினமும் இந்திரா உணவகத்தில் சாப்பிட உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வருகிற 16–ந் தேதி இந்திரா உணவகத்தை தொடங்கி வைக்கிறார். அவர் வருவது இன்னும் உறுதியாகவில்லை. இந்திரா உணவகத்தை தொடங்கி வைக்க வருமாறு ராகுல்காந்திக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது.

198 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்திரா உணவகம் அமைக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும். சில காரணங்களால் 125 வார்டுகளில் மட்டும் முதலில் அமைக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மற்ற வார்டுகளிலும் இந்திரா உணவகம் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.


Next Story