தேனியில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தேனியில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Aug 2017 3:45 AM IST (Updated: 7 Aug 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சியின் மொத்த பரப்பளவு 22.23 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் அமைந்து உள்ளன. இங்கு 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94 ஆயிரத்து 453 பேர் இருந்தனர். தற்போது மக்கள் தொகை 1 லட்சத்தை கடந்து இருக்கலாம் என்றும், மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

நகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பழனிசெட்டிபட்டியில் முல்லைப்பெரியாற்றிலும், குன்னூரில் வைகை ஆற்றிலும், வீரப்ப அய்யனார் கோவில் அருகில் பனசலாற்றிலும் உறைகிணறு அமைத்து, தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. 3 இடங்களில் தண்ணீர் எடுத்து வந்தாலும் கோடை காலங்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. மழைக் காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், கோடை காலங்களில் மேலும் அதிகரிக்கிறது.

நகரில் நாளுக்கு நாள் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வினியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது. பின்னர், அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து வைகை அணையில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, மக்களுக்கு வினியோகம் செய்வது என்று புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 2011–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9–ந்தேதி நீர்பகிர்மான குழுவின் தொழில்நுட்ப உதவி குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், தேனி நகரில் 2045–ம் ஆண்டு மக்கள் தொகை 1 லட்சத்து 55 ஆயிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு, அப்போதைய மக்கள் தொகைக்கு தட்டுப்பாடு இன்றி தினமும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதன்படி, தேனிக்கு ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பில் வைகை அணையில் இருந்து புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் கடந்த 2013–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 24.62 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. வைகை அணை அருகில் இதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.

தேனி நகரில் 4 இடங்களில் உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. தேனி பாலன் நகரில் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு, கக்கன்ஜி காலனியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு, கே.ஆர்.ஆர்.நகரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு, கருவேல்நாயக்கன்பட்டியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. நகர் பகுதிகள் முழுவதும் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. குடியிருப்பு விரிவாக்கம் அடைந்த பகுதிகளிலும் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு அடைந்து, சோதனை ஓட்டம் நடத்த தயார் நிலையில் உள்ளது. சோதனை ஓட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் 25 அடிக்கும் கீழ் சென்றதால் சோதனை ஓட்டத்திற்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர். கடந்த கோடை காலத்தில் வைகை அணையில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி–சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்காக இந்த தடை விதிக்கப்பட்டது.

வைகை அணைக்கு மூல வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து இல்லாத நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் வைகை அணைக்கு வந்தது. அணையில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து இல்லை. 71 அடி உயர அணையின் நீர்மட்டம் 31.20 அடியாக இருந்தது. அணையில் 419 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வைகை அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால், தேனி நகருக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவு அடைந்து 5 மாதங்கள் ஆகியும், இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. எனவே, இந்த குடிநீர் திட்டப் பணிகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

அணையின் நீர்மட்டம் 31 அடியை கடந்து உள்ள நிலையில், சோதனை ஓட்டம் நடத்தி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், இன்னும் நீர்மட்டம் உயர வேண்டும் என்று பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதால், இந்த திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.

புதிய குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வராத காரணத்தாலும், தேனியில் ஏற்கனவே செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களில் போதிய அளவில் தண்ணீர் எடுக்க முடியாத காரணத்தாலும் நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. கோடை காலத்தை போல், தற்போதும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் குடிநீரை விலைக்கு வாங்குவதற்கே அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் வாங்கினால், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 2 நாட்களுக்கு கூட போதுமானதாக இல்லை. இதனால், பொருளாதார ரீதியான பாதிப்புகளையும் மக்கள் சந்திக்க வேண்டியது உள்ளது.

எனவே தேனி அல்லிநகரம் நகராட்சிக்கான புதிய குடிநீர் திட்டத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவு அடைந்து விட்டன. சோதனை ஓட்டம் நடத்தி, திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தற்போது நிலவி வரும் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்களில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் தண்ணீர் சீரான இடைவெளியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்’ என்றனர்.


Next Story