குடிநீர் வழங்கக்கோரி நடைபயணம் செல்ல முயன்ற பொதுமக்கள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி நடைபயணம் செல்ல முயன்ற பொதுமக்கள் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:15 AM IST (Updated: 8 Aug 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே குடிநீர் வழங்கக்கோரி நடைபயணம் செல்ல முயன்ற பொதுமக்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி,

அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயகவுண்டன்புதூர், விநாயகா கார்டன், பிச்சாண்டம்பாளையம் பெரியஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் கிடைப்பதில்லை.

பிச்சாண்டம்பாளையத்தில் பொதுகழிப்பிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு நிதி ஒதுக்கியும் எந்த வேலையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பெரிய ஓலப்பாளையம் முதல் பிச்சாண்டம்பாளையம் வரை தார்சாலை அமைக்க வேண்டியும், குடிநீர் முறையாக வழங்கக்கோரியும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், தங்களின் அடிப்படை பிரச்சினையை தீர்க்கக்கோரியும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் வடுகபாளையத்தில் இருந்து அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை தண்டோரா போட்டு நடைபயணம் சென்று போராட்டம் நடந்த முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை வடுகபாளையத்தில் பொதுமக்கள் ஒன்று கூடினார்கள்.

பின்னர் அவர்கள் தண்டோரா போட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபயணம் செல்ல முயன்றனர். இதை அறிந்த அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி தலைமையிலான போலீசார் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி வேலுசாமி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடைபயணம் செல்ல முயன்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அடிப்படை பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படுவதுடன், குடிநீர் பிரச்சினையை உடனே தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story