தேங்கி நிற்கும் தண்ணீரில் எண்ணெய் பந்து வீச்சு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை


தேங்கி நிற்கும் தண்ணீரில் எண்ணெய் பந்து வீச்சு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக கொசு உற்பத்தியை தடுக்க தேங்கி நிற்கும் தண்ணீரில் ‘எண்ணெய் பந்து’களை வீசி வருகின்றனர்.

வேலூர்,

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில், மாநகராட்சி கமிஷனர் குமார் அறிவுரையின்படி 2-வது மண்டலத்தில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2-வது மண்டல உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் கொசு உற்பத்தியை தடுக்க ‘எண்ணெய் பந்து’களை வீசி வருகிறார்கள். மரத்தை அறுக்கும்போது ஏற்படும் பொடியை, வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணையுடன் கலந்து அதை பந்துபோன்று உருவாக்கி சாக்குப்பைகளில் வைத்து கட்டி, அதை தேங்கிநிற்கும் தண்ணீரில் வீசி வருகின்றனர்.

இந்த எண்ணெய், தண்ணீரில் பரவுவதால் அங்கு கொசுவராது என்றும், தண்ணீரில் ஏற்கனவே இருக்கும் லார்வா புழுக்கள் அழிந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணி 2-வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Tags :
Next Story