தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

தலைவாசல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
தலைவாசல்,
தலைவாசல் அடுத்து இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 6–வது வார்டில் சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இதில் விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
இந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்து வரும் ஊராட்சி குடிநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் திரண்டு வந்து நேற்று காலை 10 மணியளவில் தலைவாசல்–வீரகனூர் செல்லும் சாலையில் இலுப்பநத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரில், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தலைவாசல் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிமுத்து, அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு காலை 11 மணியளவில் கலைந்து சென்றனர்.
சாலைமறியல் போராட்டம் காரணமாக தலைவாசல்–வீரகனூர் செல்லும் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.