சட்டசபையில் சர்க்கரை ஆலை மீதான விவாதம் ரத்து எதிர்க்கட்சிகள் கண்டனம்

சட்டசபையில் சர்க்கரை ஆலை மீதான விவாதம் ரத்து ஆனதால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மும்பை,
பர்பானியை சேர்ந்த சர்க்கரை ஆலை ஒன்று விவசாயிகளின் ஒப்புதல் இன்றி, அவர்களது பெயரில் வங்கிகளில் ரூ.328 கோடி வரை கடன் பெற்றதாகவும், இது மிகப்பெரிய ஊழல் என்பதால், இதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் பிரிதிவிராஜ் சவான் நேற்று சட்டசபையில் வலியுறுத்தினார்.
எனினும், விவாதத்துக்கு மறுப்பு தெரிவித்த சட்டசபை விவகாரங்கள் துறை மந்திரி கிரிஷ் பாபத், ‘‘சட்டசபையில் விவாதிக்க பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. நேரம் இன்மை காரணமாக, சர்க்கரை ஆலை விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது’’ என்றார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கோஷம் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, சட்டசபையில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆளும்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முதலில் பேச்சு நடத்தி பின்னர், இறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதேவேளையில், பர்பானி சர்க்கரை ஆலை மீதான விவாதம் ரத்து செய்யப்பட்டது.