பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பாளையங்கோட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை தெற்கு, மாநகர் மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் ரவிதேவேந்திரன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், மகளிர் அணி செயலாளர் ராதிகா மதன், மாவட்ட தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, “நீட் தேர்வால் கிராமப்புற மாணவ–மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தேர்வு எப்படி எழுத முடியும்? எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும்“ என்றார்.
கோஷங்கள்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முருகன், தொழிற்சங்க செயலாளர் மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ஜெகன் பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், நிர்வாகிகள் கலை செல்வன், விஜி தேவேந்திரன், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.